வெள்ளி, 22 ஏப்ரல், 2016

வைகறைக்கு ஏன் அஸ்தமனம்

இனி எங்கு
வைத்திருக்கபோகிறாய்
உன் புன்னகையை? 

இந்த வீதியில்  உனை பார்க்காமல் போன பொழுதுகள்
இப்படி நிரந்தரமாகக்கூடும்
என நினைக்கவேயில்லை.

வைகறை வைகறை
எப்போதுமே போனாய் அஸ்தமனத்திற்குள் ?

இன்னும் அந்த கணங்கள் கனமாய்அமர்ந்திருக்கிறது மனதிலும் விழியிலும்!

ஜெய்குட்டிக்காகவேனும் இன்னும் நீ இருந்திருக்கக்கூடாதா?

வெட்டப்பட்ட மரத்தை கடப்பதற்கு மனபிறழ்வாயிருக்கவேண்டும் என்றாயே வீதியில்!

உன் மரணத்தை கடப்பதற்கு மனப்பிறழ்வாய் தானிருக்கவேண்டும்  இந்த இலகுமனமும்!

வியாழன், 24 மார்ச், 2016

ஏக்கங்களின் விதை

இமைகள் நீங்காத
உறக்கம் வந்தால் போதுமானது
இரவை கடப்பதற்கு!

ஈரத்துணியில் நீர் உறிஞ்சும் காற்றினைப்போல
உன் நினைவென் உறக்கத்தை
உறிஞ்சிக்குடிக்கிறது சலனமின்றி!

ஓடும் சக்கரங்களெனினும்
ஒட்டி முத்தமிடும் தண்டவாளமாய்
ஒற்றி ஒற்றியெடுக்கிறேன்
உன் கனவு உதடுகளில்

எப்போதேனும்
வந்தமர மாட்டாயா
என் காதோரம்
கிசுகிசுத்து குழல்கோதும்
காற்றென?

காத்திருக்கிறேன்
பாலைதான் பயணமென
பலபேர் பகன்றாலும்
பனித்துளியேந்தும் கள்ளிச்செடியின்
முள்குவிந்த இலையென!

படம்  உதவி    உமையாழ் பெரிந்தேவி

செவ்வாய், 15 மார்ச், 2016

கண்கொள்ளா காட்சி

அவர்கள் அளவுக்கு
அரிவாளோ,  கத்தியோதான் கிடைக்கவில்லை
கற்கள் கூடவா கிடைக்கவில்லை?

பாலைநிலத்திலா
நின்று வேடிக்கைப்பார்த்தீர்கள்? 

இளஞ்செடியொன்றின் வேரது
வெட்டரிவாள் கொண்டு வெட்டப்படுவதை?

போராட்டம்  போலீஸ்  தடியடி இவைகளில்
கல்மழையே குவித்துவிடும் நீங்கள்தானா
நேற்று கையறுநிலையில்?

இலவசம்,  சலுகை தள்ளுபடி இவற்றில் தள்ளுமுள்ளு,
தில்லுமுள்ளு செய்தேனும்   ஒருநொடியில்      உள்நுழைந்துவிடும்
நீங்கள் தானா
துளிர்
உயிர் வெளியேற நின்றீர்கள்
மனிதமற்ற பிணமாய்?

வரட்டும் தேர்தல்
வாக்களியுங்கள்
உங்கள் சாதிக்காரருக்கு
கத்தியிலோ அரிவாளிலோ
அனுப்பிவைக்கப்படுவீர்கள்
சொர்க்கவாசலுக்கு

அதுவரை வேடிக்கை
அனைவருக்கும் வாடிக்கை!

தேர்தல் அவசரம்

தேர்தல் அவசரம்!

ஆகவே
கடந்து விடுங்கள்
கழுத்தறுபடும் காட்சிகளை!
மறந்துவிடுங்கள்
மரண அலறல்களை!

இனி ஒலிப்பதெல்லாம்
அன்பான வாக்காள பெருமக்களே
தாய்மார்களே, 
சகோதர, சகோதரிகளே!

நான் முதல்வரானால் ...
நாங்கள் வெற்றிப்பெற்றால் ...
நீங்கள் வாக்களித்தால் ...

இவைதான்
இனி தாயக மந்திரம்!
ஓட்டு ஒலிப்பான்களுக்கிடையில்
நசுங்கியே போகட்டும் குரல்வளைகள் .

ஏனெனில் 
"தேர்தல் அவசரம் "!