திங்கள், 22 பிப்ரவரி, 2016

தூண்டில்

வார்த்தைகளால் வசீகரிக்கிறாய்
வலைவீசாமல் மாட்டிக்கொள்கிறேன்
துடிப்பதற்க்காகவே  
தூண்டில் இடுகிறாய்

தறியின் கரம்பிடித்த  நூலாய்
விலக மனமின்றி
உறவாடிக்கொண்டே இருக்கிறேன்
உயிரின் ஊடாக...... 

ஏகாந்த அலைகளை
எழுப்பிக்கொண்டே போகிறாய்
இசையென எண்ணி
இரைச்சல்களையும்
ரசித்துக்கொண்டிருக்கிறது மனம்

ஊசித்துளைக்காத
உயிரையும் துளைத்து 
நீ நுழைந்தாய்
ஒரு வ(லி)ழியும்   இல்லாமல்...!!

வீட்டுக்கு வந்த
விருந்தாளியைப்  பற்றிக்கொண்டு
விடாமல் அழும் குழந்தையாய்
உனைப்பற்றி
குழறிக் குழறி கெஞ்சுதடி
குரல்வளையும்
என் உயிர்வளியும்!!

என்னை விட்டு
எப்போது நீ  போகிறாயோ
அந்நொடியில்
உன்னோடே வந்துவிட
உயிர்
பயிற்சி   எடுக்குதடி
ஒவ்வொருமுறையும்
வெளிவந்து .......

கவிதாயினி நிலாபாரதி

திங்கள், 15 பிப்ரவரி, 2016

தனக்கென முயலுநர்

ஐந்தாண்டுகளாக எங்கள் குறைகள் அரசால் தீர்க்கப்படவில்லை
ஊதியமுரண்பாடுகளை களைய வற்புறுத்தி 20அம்ச கோரிக்கைகளுடன்
அரசு ஊழியர் சங்கத்தினர் போராட்டம்!  - செய்தி!

அரசு செய்தது சரியே!

பட்டினிகிடப்பவனின் வலியை உங்களுக்கும் பசி வந்தால் தான் உணர்வீர்களெனில்
உங்களை பசியோடு வைத்திருக்கலாம் தவறில்லை
அரசு இயந்திரசக்கரங்களே!

விளைந்தநெல்லுக்கு சரியான விலையில்லை!
பிழிந்த கரும்பின் சக்கையாக தூக்கியெறியப்பட்டிருக்கும் வறுமை எனும் எறும்புகளால் அரித்துதின்னப்படும் நாங்கள்!

காடுவிற்று ,கழனி விற்று கல்விக்கு கட்டியத்தொகைக்கு வழியின்றி கந்துவட்டிக்காரனிடம் அடமானமாய் எங்கள் தன்மானம்

படித்தவர்களுக்கு வருவாய்க்கு வழியின்றி வயிற்றை நிரப்பிக்கொள்ள ஏதோ ஒரு வேலையெனும் அடிமைத்தனம்!

எல்லாவற்றுக்கும் மேலாய் எங்களுயிரை குடிக்கும் டாஸ்மாக்,  மீத்தேன்,  வயலுக்கு வலைவிரித்து கெயிலும் இப்போதைக்கு இறுதியாய்!

இவற்றுக்கெல்லாம் வலிக்காத உறைக்காத உங்கள் சதையா ஊதியத்தின் உயர்வுக்காய் மட்டும் உரத்தசத்தமாய் அழுகிறது!

நான் பட்டினியில் அழுது சாகிறோம்
நீங்கள் உங்கள் பரம்பரைக்கு போதவில்லை என்று போராடுகிறீர்கள்

வயிறும் வயலும் உயிருக்கும் மிஞ்சியதாய் இந்த பூமியில்           ஒரு மயிரளவு கூட எஞ்சியது எதுவுமில்லை

உணருங்கள்  எம் கேளிரே!

நரைக்காத காதல்


என் உலகத்தின்
உருண்டையில் 
எந்ததிசையில் நீ நிற்கிறாய்!

எந்ததேடுதலிலும் தோற்றுப்போகிறேன் உன்னைமுழுமையாக கண்டடையமுடியாமல்

ஆழ்கடலில் முக்குளித்தும் தேடுகிறேன்
அலைபரப்பின் மேல்விழுந்து சிப்பிக்குள் உறையும்
மழைத்துளி நீ என அறியாமல்!

காகிதம் படித்தவன் மட்டுமல்ல
காதலையும் களங்கமற
படித்தவன் நீ!

அத்தனைசுகங்களையும்
அன்பால் தந்து அணைத்தவன் நீ

புறச்சூழல்களால் புறக்கணிக்கப்படுவதாய்  காரணிகள் பல சொல்லி
என் காயங்களுக்கு நீயே வாள்சுழற்றுகிறாய்!

சத்தமிடத்துணியாமல் சரணடைகிறேன்
சாகும் நிலையிலும் நரைக்காது உனக்கு  என்மீதான காதல்!

நம்பிக்கை நங்கூரமிடுகிறது     நகரும் இந்தநாட்கள்!

சனி, 6 பிப்ரவரி, 2016

நாம் தானே கொலைக்காரர்கள்?

இதை எழுதுவதற்கு
கொஞ்சம் அச்சம் தான்
கொலைகாரர்களாகிய நாமே எழுதும் குற்றப்பத்திரிகை
அல்லவா இது!

ஆம் !வெளியில் சுதந்திரமாய் சுற்றித்திரியும் சூன்யகாரர்கள் நாம்!
அரைகுறை வெளிச்சம் போதும் அமாவாசை பற்றியெல்லாம் பயம்கொள்ளாத பயங்கரவாதிகள் தான்

வெள்ளித்திரைக்கு தங்கம் பூட்டிமகிழ்விக்கும் பூம்பூம் மாடுகள் நாம்!

இருபத்து ஆண்டுகளில் எல்லாமே கிடைத்துவிட்டது கையேந்தாமல்
பிச்சையென பேரழிந்து இலவசம் எனும் புனைப்பெயரில்

இருப்பவர்களை பற்றி நினைப்பதுமில்லை இறந்தவர்களை மறப்பதுமில்லை இருநாட்கள் இரங்கற்பா
இயற்றும் வரைக்கும்

நாம்தான் கொன்றோம் நரம்பில்லாத நாக்குகளால்
நாணமில்லாத செய்கைகளால்
ஒவ்வொரு ஆண்டுக்கும் ஐவராய்

தன்வயிற்றுக்காய்  போராடும் மனிதர்களுக்கு மத்தியில்
ஈழ உயிர்களுக்கு மூச்செரிந்து மாண்டானே முத்துக்குமரன்

காதலுக்காய் வாழ்ந்தவன் சாதிமோதலுக்காய் சக்கரங்களில் துண்டானனே இளவரசன்
குலம்தழைக்க வைத்திருந்த குலமகன் கோகுலனை கொலைக்களத்துக்கு அனுப்பிய கள்ள தூதுவர்கள் நாம்தானே !

வித்யாவும் விஷ்ணுபிரியாவும்
புனிதாவையும்  கூட
மரணக்குழியில் தள்ளிவிட்ட மனிதர்கள் நாம்!

பெருவெள்ளத்தையே மறந்தவர்கள் பேரறிவாளனே உனக்கா குரல்கொடுக்கப்போகிறார்கள்

பாலிலிருந்து பாழும் எல்லாவற்றிலும் களவாணிகள் களம்கண்டுவிட்டார்கள்
இனம்கண்டும் பிணம் போல நாம்!    


அமெரிக்காவில் வெள்ளஅபாயத்தை சரியாக கையாளாத அமைச்சரை கைதுசெய்து பத்தாண்டுகள்
பத்திய தண்டனை வாங்கிக்கொடுத்ததைப்போல வாங்கிக்கொடுக்க நாமென்ன அமெரிக்கா அறிவாளிகளா என்ன?

இருபத்துநான்கு மணிநேரமும் மதுபானக்கடை திறந்தாலும்
பேசத்தெரியாத திக்கு வாய் மூடர்கள் நாம்?

ரோகித் முதல் மோனிசாவரை மென்றுதுப்ப பழகிவிட்ட படுபாவிகள் நாம்!

ஊழல் வழக்குகள் எல்லாம் ஊறுகாய் தான் உச்சமன்றத்திற்கு!
அவர்கள் கண்கொத்திபார்வைகளெல்லாம் காளைகளுக்கும்,கழனியில்நிற்கும்
கிழவனுக்கும் தான்!

இதோ  ராப்பிச்சைக்காரன் வேடம் தரிக்க தயாரிவிட்டார்கள் ராஜதந்திரிகள்
மண்குடிசையை நோக்கி மந்திரிகள்!
காலில் விழும் கயவர்களை கையெடுத்து கும்பிட்டு அனுப்பிவிட்டு நீங்கள்  புட்டிகளிலும்  அம்மணிகளில் பொருட்களிலும் புளகாங்கிதம் அடையுங்கள்!

நாம் முதுகெலும்பு அற்றவர்கள்
மூச்சுவிடும் கோழைகள்
வலுவில்லாத நமக்கு வாக்கு எனும் வாள்(ய்)சுழற்றல்கள் என்ன வீண்தானே?

வீசும் காற்றுபட்டங்களை வாங்கிக்கொண்டு வாழ்க்கையையே அடகு வைக்கும் நாம்தானே கொலைக்காரர்கள்!


ஆத்தா நாங்க ஃபெயிலாகிட்டோம்

ஐம்பது ஆண்டுகளாய்
ஐயங்கள் ஏதுமின்றி
எல்லோரும் எழுதுகிறோம்
தேர்தல் பரீட்சை

தலைவர்கள் மீது
மையல்கொண்டு மையைக்கொஞ்சம் இட்டுக்கொண்டோம்
நீலமை
ஏனோ  கருப்பாய்   மாறி
வெளுத்துப்போனது
எங்கள் தேசம்!

கேள்விகள் இல்லை ஆனால்
ஐயங்கள் ஆயிரமுண்டு
ஆள்வது ஐயனா  ? பொய்யனா ? என்பது மட்டும்
மண்டைக்குள் ஏறுவதில்லை !

சீட்டைமடித்து பெட்டிக்குள்
போட்டு புலம்பிவந்தகாலம் போய்
பொத்தான்களின் பெட்டிக்குள் போட்டுவருகிறோம்
பொன்முட்டைவாத்து எனும் பொல்லாத வாக்கை

பாலோடும் தேனோடும் என்றார்
பஞ்சம தேரோட விடாதார்
விதி வந்து வீதிவந்ததை தொட்டுவிட்டால்
வீடுகளையே கொளுத்திவிட்டு
குடிசைக்கு மாற்று என்பார் கொள்கையைப்போல!

எல்லாரும் படித்து விட்டோம்  குடிநாட்டுக்கு கேடு
நாங்க குடிக்காமவிட்டாமல்
அவங்களுக்கு ஏது
கொடநாடும் கொடையாக நாடும்!

எட்டாம்வகுப்புவரை
இலவச தேர்ச்சி
இரண்டு மூன்று ஆண்டுகள் இயந்திர பயிற்சி !

எல்லோர் வீட்டிலும்
இரண்டு பொறியாளர்கள்
இரண்டாம் தலைமுறை பட்டதாரிகள்
வள்ளலாய் கல்வி
வறுமையை நீக்க
வழிதெரியாமல்!

பழையகொள்கையுடனும்
புதியசால்வைகளுடனும்
வேட்டியைத்துறந்தவர்கள் வெட்கமின்றி வீதிவழிவருகிறார்கள்!

படித்தவர்கள் அனுமதித்தால்
பட்டியலிலும் இடமுண்டு
இறக்கும்வரை எழுதிவிடுவோம்
இறுதித்தேர்வு என்பதனை

பலருக்கு இது பணச்சுற்று
சிலருக்கு இது முதல்சுற்று
நம்பியோருக்கு இறுதிசுற்றிது 

வெற்றிப்பெற்றது உங்கள்
வேட்கை
முற்றுபெறுகிறது
எங்கள் வாழ்க்கை!

நெல்லுச்சோறு
நித்தம் தான் தின்பேன்னு
நெடுநாள் கனவு கண்ட ஆத்தா
உன் கரும்சாம்பலில்
கண்ணீரோடு சொல்லுகிறேன்
ஐம்பதாண்டு காலத்தேர்வில்

ஆத்தா நாங்க ஃபெயிலாயிட்டோம்!


புதன், 3 பிப்ரவரி, 2016

அது ஒரு கனாக்காலம்!

அன்றொரு நாள் ஆறுவயதில் அழுகையை துவங்கியது
இனிப்பு மிட்டாய்களுடன்
எனது கல்விப்பயணம்!

உடனிருப்பாய் ஒன்றுமில்லை என்விரல்பிடித்த தந்தையின் கையைத்தவிர!
பள்ளியென்ற பயமே
பதுங்கும் குட்டிப்பூனையானேன்.
என்னையும் உடல் முழுதும் ஒளித்துக்கொண்டு விழிகளால் மலங்க மலங்க விழித்தபடி தலைமையாசிரியர் அறைக்குள் அப்பாவுடன் நுழைகிறேன் .
புன்னகை மட்டுமே  பூச்சாய் கொண்ட
வெள்ளைஉடை தேவதை என்தலைகோதுகிறாள் .
கைகளால் என்விரல்பற்றுகையில் வியர்த்து சிலிர்த்த என்னுடம்பு இளைப்பாறுகிறது சற்று!

கைப்பிடித்து காதுதொட பணிக்கிறாள் எட்டியும்
எட்டாமலும் தொட்டுவிடுகிறேன்
அவளுக்கோ...
வானம்தொட்டுவிட்ட பரவசம்!
அன்றைக்கே அதிசய        வரமளிக்கிறாள்
வகுப்பறை உனக்குத்தான் சொந்தமெனும் ஒற்றைவரம் .

கூடவே ஒளிர்கிறது
என் அப்பாவின் கண்களிலும் ஒளிமிக்க எதிர்காலம் .

சில்வர் தட்டுகளில் ஒத்தகாசு மிட்டாய்களும் இதயவடிவ இனிப்பு மிட்டாய்களும் மட்டுமே தட்சணையாக கொடுக்கிறேன் தலைமையாசிரியை எனும் தேவதைக்கு .
ஒன்றிரண்டை எடுத்துக்கொண்டு என்னை அனுப்பிவைக்கிறாள் இன்னொருகூடத்திற்கு
நான் அப்போதுதான் உணர்கிறேன் தெய்வம் பள்ளிக்கூடங்களிலும் பவனிவருமென ..
ஆம் என் முதல் வகுப்பு ஆசிரியை பேர் அறியாமல் குண்டு டீச்சர் என்றேதான் அறியப்பட்டார்
அப்போது சாக்லேட் என்பதோ சாதி  என்பதோ நாங்கள் யாரும் அறியவில்லை .
என்வகுப்பில் இருந்த அத்தனை பேருக்கும்  மிட்டாய்களை பகிர்ந்தளிக்கிறேன்..
பதிலாக அவர்கள் புன்னகையினை பரிசளிக்கிறார்கள். மிட்டாய் தீர்ந்தபின்னும் ஏனோ தீராமல் கரையாமல் அப்படியே இனித்தபடி இன்னுமிருக்கிறது புன்னகைகள்!
அன்று மதியம் வரை அப்பா என்னோடு...
பிறகு கையசைத்துகிளம்புகிறார் அவர் மனமசைந்து  மெல்லவந்து     என் அருகில் அமர்ந்துகொள்கிறது 

அப்படியே கரும்பலகையில் "அ" எனும்  அழகிய கடவுள் வரைகிறார் என்பெயரறியா தேவதை
ஒவ்வொரு எழுத்தாய் எழுந்துவந்து  மின்மினியாய் மனதிலும் வந்து ஒட்டிக்கொள்கிறது .

பட்டாம்பூச்சிகளின் முதுகில் புத்தகக்கூடுகள் சுமக்கவில்லை
மஞ்சள்பைதான் எங்கள் இறக்கைகளாய் அங்குமிங்கும் அசைந்தாடிபடியே
தாளமிட தட்டுகளும் !

அன்றிலிருந்து  பதிமூன்று ஆண்டுகளாய் கல்வி எப்போதும் கசந்ததில்லை கணக்கு பாடம் ஒன்றைத்தவிர!

கட்டணம் கட்ட கங்கணம் கட்டியதில்லை
தண்டம் என்பது வகுப்பறையில் மட்டுமில்லை
வார்த்தைகளில் கூட இருந்ததில்லை .

வளர்த்தெடுக்க தாய்பட்ட கடமையை விட,
வார்த்தெடுத்த கும்பிடத்தகுந்த குயவர்கள் என் ஆசிரியர்களே !

படிப்பு, வாசிப்பு, சிந்தனை எல்லாம் என் ஆரம்ப, நடுநிலைப் பள்ளி  நன்றாகக்கொடுத்ததே நான் பெற்ற வரம்!

கூடவே சத்துணவுதான் எங்கள் படிப்புக்காலத்தின் மொத்த உணவு அரசுவிடுமுறைகாலத்திலும் அப்பள்ளியின் ஆயாக்களே எங்கள் மணிமேகலைகள் அண்டாக்களே எங்களின் அட்சயப்பாத்திரம்!
கீரைகளில் மசிந்து, காய்களில்  குழைந்து முட்டைகளில் உயிர்வளர்த்து ஆசிரியர்களோடு அறம் வளர்த்தவர்கள் அவர்களுமே!

இசை,  நடனம்,  நாடகம்,  விளையாட்டு அத்தனையும்  மின்மினிகளை விடிவெள்ளிகளாக்கி  விண்ணிலல்ல
மண்ணில் மக்காமல் மின்னவைத்தவர்களே
எங்கள் ஆசிரியர்கள்!

ஆனால் இன்று
அப்படியிருக்கிறதா வகுப்பறை?  ஆசிரியர்களிருக்கிறார்களா பள்ளிக்கூடங்களில்?
மணியடித்ததும் சோற்றுக்கு ஓடும் பஞ்சகால பிள்ளைகளை போலல்லவா ஓடுகிறீர்கள் பேரூந்துகளை பிடிப்பதற்கு!

உங்கள் பிள்ளைகள் எல்லாம் கான்வென்ட் பள்ளிகளின் கல்லாபெட்டிகளை நிறைப்பதற்காக எங்கள் வயிற்றிலல்லவா  வரிக்கோடிடுகிறீர்கள்?

ஒவ்வொரு ஆண்டும் ஒன்றுகூடுகிறீர்கள் ஊதியம்வேண்டுமென்று ...

வகுப்பறை கூட  வேண்டாம் விட்டுவிடுங்கள்
மரத்தடியில்கூட மாணவர்க்கு ஞானம் பிறக்கக்கூடும்.

கழிப்பறை பற்றிக்கவலைஉண்டா?
சிறுநீர் கழிக்கமுடியாமல் ஒற்றைவிரல்தூக்கி கேட்கவும் முடியாமல் ஆடையில் கறைபட்டுவிடுமென அஞ்சியபடியே வெட்கத்தில் விரும்பிய கல்வியை விட்டுவிட்டு விலகிப்போன என் தலைமுறைகளுக்கு  என்ன கொடுத்திருக்கிறீர்கள்? 
உங்கள் குரலையாவது ஒலித்திருக்கிறீர்களா? 

நீங்கள் சரியாகக்கற்பித்திருந்தால் SSA திட்டங்களுக்கு என்ன வேலையிருந்திருக்கப்போகிறது?

கருவறை தாண்டியும் வகுப்பறைகள் கல்லறைகளாக மாறுவதை, மாற்றுவதை
இனியேனும் களையெடுத்தாலென்ன?  கருவறுத்தாலென்ன?

ஆசிரியர்களே எங்களுக்கு வினாக்களுக்கு பதில்கூறுங்கள்?
இல்லையேல் வகுப்பறைக்கு வாருங்கள்..
நாங்கள் நடத்துகிறோம் வாழ்க்கைபாடம் எதுவென!