திங்கள், 25 ஜனவரி, 2016

ஜொலித்த வீதி

சிலநாட்களை சிந்தைகளில் மறக்கமுடியாது  அப்படித்தான் நேற்றையபொழுதும்,

வீடுகளுக்கு பெயருண்டு. வீதிகளுக்கும் பெயருண்டு.
வீதியே பெயராய் ஆனது வியப்புதான்! 

புதுகையின் பூரிப்பும், பெருமையும் வீதியைப்பொறுத்தே என்றால் அதுமிகையில்லை.

இப்போதும் அப்படிதான்
வீதியை உருவாக்கி விரிவாக்கம் செய்யும் வித்தகக்கலையை விதவிதமாய் செய்யும்  கவிஞர்கள் அமைப்பாளர்கள் திரு. கீதா  வைகறை  இவர்களோடு துணைநிற்கும் இமயங்களை நான் என்னவென்று சொல்வேன்? 

முதல்முறை நான் வீதிகளத்திற்கு வந்தது கடந்தமாதம் தான் .
புத்தாண்டின் பரிசாய் புதுக்கவிதை வாசித்து மகிழும் வாய்ப்பை தந்தது வீதிக்களம் .

வலைப்பதிவர் மாநாட்டில் கண்டைந்தேன் பல நல்ல மனிதர்களில் நட்புகளை...

அப்பப்பா அசந்துபோனேன் பல புதிய மனிதர்களை புதுகை புதையலாகக்கொடுத்தது என்னவோ நான் செய்த தவம்தான்!

மதுரைக்குச்சென்றிருந்தேன் சொந்தப்பணியாக இம்மாதக்கூட்டத்தில் நானும்  கூடடைவேனா என்ற அச்சம்வேறு...
என்றாலும் ஒரு நம்பிக்கையில் மூன்றுமணிநேரம் பயணித்து  வந்துசேர்ந்தேன் சங்கத்தமிழ்வளர்த்த மதுரையிலிருந்து பொங்குதமிழ் வளர்க்கும் புதுகைக்கு!

பூ மலர்வது போல அவ்வளவு மகிழ்வு தேவதா எனும் தேவதையின் முகத்தில்
சிறப்புத்தரிசனமாய் சிறப்பு அழைப்பாளர் திரு வெங்கட் நாகராஜ் அவர்களின் அறிமுகம் பெருமகிழ்ச்சி கொண்டது மனம்!

மேகத்துளிகள் ஒன்று சேர்ந்து மழையாவதுபோல 
கடலானது களம்!
கவிஞர்கள் வருகையால் ....

தொடங்கியது ...
படித்ததில் பிடித்ததை
பகிர்ந்தது பிடித்தது பகிர்ந்தவர்களையும் சேர்த்தும் பிடித்தது .

வரவேற்புரையை திரு. கீதா  அவர்கள் துவங்க அப்புறம் ஆரம்பித்தது பாருங்க அடைமழை!

ஓவியாவின்  
"உதிரத்தை உலுக்கச்செய்த வெண்மணிக்கொடுமைப்பற்றியப்பாடல்
சோலச்சியின் "மானமுள்ள தமிழினமே " என இழந்த ஒன்றின் இருப்பை தெரிவிக்கும் பாடல்!

கூடவே முன்னத்திஏராய் விளங்கும் முத்து நிலவன் அய்யாவின் கருத்துக்களும் சுவைசேர்த்தது .

கவிதைக்களம் புகுந்தேன் நானும்!  கொஞ்சம் பதற்றத்துடனும் நிறைய நம்பிக்கையுடனும்!

சமூகத்தின் அவலங்களை தோலுரிக்க சாட்டையை சுழற்றுவதென முடிவுசெய்து தான்

"வீணாபோன வேட்டி,  சடுகுடு " எனும் கனல்கக்கும் கவிதைகளை தேர்ந்தெடுத்து வாசித்த நான் கொஞ்சம் அல்ல
நிறைய வேகமாகவே வீசிவிட்டேன் சாட்டைகளை!

சட்டென்று மின்னி சடுதியில் மறைந்த மின்னலாய் பலரின் மனம் தொட்டுப்போனதை பிறகுதிர்த்த கருத்துக்களில் கண்டுகொண்டேன் .

இன்னும் பொங்கலுக்கு சர்க்கரையாய்,
பாலுக்கு  தித்திப்புகூட்டும் தேனாய்,  தேடும் திரவியமாய்
நண்பர் செல்வா மற்றும் மாணவக்கவிஞரின் கவிதைகளும்  களம் கண்டது.

அத்தனைப்பேரின் பாராட்டே எனக்கு  அரசவையில் பொற்கிழிபெற்றதொரு பூரிப்பு! 

அப்படியே சிலாகிக்க சிறுகதை,
துரைக்குமரனின்
உப்புவேலியின் ஓர்அறிமுகம்

"உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்" என்ற வள்ளுவனின் வாக்கை நாக்கால் மட்டுமல்ல மனதால் எண்ணிக்கொண்டால் வெற்றிஎன்பது  விண்ணளவு தூரமில்லை என்பதை தனதனுபவத்தால் பதியவைத்த பண்பாளரின் பதிவுகள் .

ஆசிரியராய் இருந்தாலும் கற்பிப்பது  மட்டுமல்லாது     வாசிப்பை பிறருக்கு ஒப்பித்தலும் ஒரு பயனே என ஹார்டியை பற்றிய பலதகவல் பகிர்ந்து வியக்கவைத்தார் நண்பரும் சகோதரருமான திரு.கஸ்தூரி அவர்கள் .

ஒருநாள் பார்வைக்கு பிறகு இவ்வளவு நேசம் சாத்தியமா?  எனத்திகைத்திருந்த வேளையில் என்னை நட்பில் திளைக்கசெய்த மைதிலியை எண்ணி மீமகிழ்ச்சியடைந்தேன் கூடவே அவரது பாராட்டுகளும்!

இடையில் இதமாக அளிக்கப்படட நவதானிய சுண்டல் சூப் என்று இன்னும் நிகழ்ச்சியை சொர்க்கமாக்கிப்போனது .

சிறப்புவிருந்தினர் சிரிப்பால், சிந்தனையால் வசீகரித்த வலைப்பதிவர் திரு.வெங்கட் அவர்கள் செலவில்லாமல் எல்லோரையும் சுற்றிப்பார்க்கவைத்துவிட்டார் தன்  பயணஅனுபவங்களால்   
எங்கள எல்லோரையும் வார்த்தைகளால் விரல்பிடித்தபடி!

அவர் கூறிய அத்தனையிலும் என்னைக்கவர்ந்தவை இவை
தீப்பற்றி எரிகையிலும் இயற்கையை சபிக்காமல் ரசித்துபழகிய மக்கள்!

"யாரோருவர் வரக்கூடும்  தன்னைத்தேடி தேநீர் பருகுதல் மூலமாக  வெம்மையைஏற்றிக்கொள்ள தன் நம்பிக்கைக்காவேனும் அதிகாலை  தீமூட்டும் தேநீர்கடைக்காரர் எனக்கு  காட்சியற்ற கடவுளாகவே தெரிந்தார் "
"பார்வையில் ஆயிரம் கதைசொல்லுவார் 
படித்தவர்தான் அதை பதிந்தும்விட்டார் என்பதைப்போல காணும் காட்சிகளால் கவிதையோ கட்டுரையோ ஏதோ ஒன்றை எழுதவும் சொல்லிக்கொடுத்தார் .

நிறைவு செய்வதற்கு முன் நெஞ்சங்களை மட்டுமல்ல வயிற்றையும் நிறைக்கச்செய்தவர் திருமிகு நீலா அம்மா! 

தலைமைக்கும் தகைமைக்கும் பூக்களோடு புன்னகையை பூச்செண்டோடு பரிசளித்தார்கள்  செல்வா அவர்களும் புதுகையின் புத்தாண்டு வாழ்த்தாக!

வரகரிசி பாயாசம் வாழைப்பூ வடையென வழங்கி மனம் நிறைத்தார்கள்  திருமிகு. நீலா அம்மாவோடு    திரு.வைகறையும்

பூக்களெல்லாம் ஒன்று கூடி புகைப்படகருவியின் கண்ணாடிபார்த்து சிரித்துக்கொண்டோம்  புதுகைசெல்வாவின் பேரன்பு பெருமுயற்சியால்!

வீதி களம் விரிவாக்குவோம் வியக்கட்டும்!
அந்த விண்ணுலகும் இந்த விஞ்ஞான உலகத்தோடு சேர்ந்தே!

சனி, 23 ஜனவரி, 2016

சடுகுடு

தீபகற்ப நாடு மட்டுமல்ல
உலகமே உற்றுப்பார்க்கும்
திருவிழாக்களின் நாடும்கூட

ஐந்தாண்டுக்கு ஒருமுறையும்
அவ்வப்போது பலமுறையும்
தடையின்றி நடக்கும் தேர்தல் திருவிழா!

வெள்ளுடை தரித்த வீதியுலாநாயகர்கள் ஊர்வலம்
தடையில்லா     தரிசனம்
கரைபுரளும் கருணைமழை!

மந்திரமாலையாய்
மக்கள் மயங்கும் வாக்குறுதிகள்
வாக்குகளால் வாய்க்கரசி போடும்  ஓட்டுத்திருவிழா

உங்களுக்காகவே நான்!  ஒற்றைவார்த்தையில் ஊரையே விழுங்கிய விசித்திரகடவுள்கள்

இரவல் இழிவென்று வாழ்ந்தவனை இலவசத்திற்கு வசப்படுத்துவதே வாடிக்கையான சாதனை

பாலுக்கும் காவல்
பூனைக்கும் தோழனாய்
புது வேடம் கட்டிக்கொண்டு ஆடுகிறார்கள்

விளைவித்தவனுக்கு
விலையிலா அரிசி
சளைத்தவனுக்கு சகலமும் பிச்சை சாமான்யனுக்கு சாராயக்கடை
இது
அரசின் கல்லாக்கடையும்கூட!

பிணைக்கப்பட்ட சங்கலிகளில் மாக்களாகிப்போன மக்களின் பிரதிநிதிகள்

காணாமல் போன கண்மாய்களை கண்டுபிடிக்க மழை வருவித்த மந்திரக்கடவுள்கள்

 
மேசைதட்டியே தவறுகளை தட்டிக்கொடுத்து பழகிய தறுதலைமன்னர்கள்!

சாதியால் கொலைசெய்யும் கொள்ளிநெஞ்சுக் கள்வர்கள்
சலனமே இல்லாமல் 
சகலத்தையும் முடிக்கிறார்கள்

மண்ணைக்கயிராய்
திரிப்பவர்களும்
விண்ணைவில்லாய்
வளைப்பவர்களும் வலம்வருவார்கள்
விஐபிவிலாசங்களுடன்!

போர்க்காலமீட்பு பொற்கால ஆட்சி
டாஸ்மாக்தமிழ்நாட்டின்அக்மார்க்..

களமாட அழைக்கிறார்கள்
கவனம்
வெற்றியென்பது விரல்மையில்!

புதன், 6 ஜனவரி, 2016

வீணாபோன வேட்டி

  சர்வதேச வேட்டிதினமாம்
வெட்கங்கெட்டவர்கள் சொல்கிறார்கள்
கட்டிக்காப்போமென

நீங்களா?
விளம்பர இச்சைக்காய்
விவசாய விளைநிலத்தின்
வேட்டியைஉருவியவர்கள் .

கோவணமளிப்பதே கொள்கையெனகொண்டவர்கள்
பருத்தி நிலத்தை பாழாக்கி
பாசனத்தை துகிலிரித்தவர்கள்

நொய்யலாற்றின் நீரைஅறுத்து நிறம் நெய்தவர்கள்
சிற்றாறுகளின்
சிரம் கொய்தவர்கள் ...

திருப்பூரை பெருநகராக்கி தறிநெய்தவர்களை
தெருவில் விட்டவர்கள் .

வேளாண்மையின்வேரறுத்து
விசைத்தறியின் நூலறுத்தவர்கள்

"கோட்டு"களுக்குள் கோடிகளுக்காய் கைக்குலுக்குபவர்கள்
ஜீன்ஸ்களின் நோட்டுகளை இறைக்கும் பிந்சில்லரைமனிதர்கள்!

பஞ்சான நூல்களில்கூட
பறப்பது பரதேசிகள் நாங்களில்லையே
பணத்துக்காய் பல்லிளிக்கும் படச்சுருள்நாயகர்கள்தானே!

வருடத்திற்குஒருமுறை வரமளித்த தெய்வத்திற்கு திதிகொடுக்கும் திருடர்கள் நீங்கள்தானடா!

ஆலயா, ராம்ராஜ் ,எம்சிஆர்
இன்னும் எத்தனைபேர்களிலடா
எங்களுக்கு எமனாவீர்கள்?

பருத்தியை பஞ்சாக்கி,
நூலை துணியாக்கும் எங்களுக்கல்லவா
அம்மணம் என்பது அவமானம்
உங்களுக்கு அது வெறும்
அனுமானம்தான்!

கட்டிக்காப்போமெனும் பெயரில் உருவிக்கொண்டு(று) விடாதீர்கள்
ஆதி மனிதனின் ஆடையான கோவணத்தை..,

நாங்கள்
கட்டிக்காத்துக்கொள்கிறோம் எங்களின் அடையாளமான அம்மணத்தையேனும்!

மீண்டும் கூவுகிறார்கள் 

சர்வதேச வேட்டிதினமாம்!


ஆற்றின் அம்மணத்தை உடுத்தியவர்கள்
அழகாய்சொல்கிறார்கள் ...
கலைந்துபோனதை கட்டிக்காப்போமென!

சனி, 2 ஜனவரி, 2016

வருக வருக!

இன்னும்
பலமுறை
வெள்ளம்
வந்தாலும்
தலைமுறை தோறும்
மதுவில் மூழ்கும்
மக்களை
மகிழ்விக்க வா

அய்லான்
தொடங்கி
ஐரோம்வரை
எளிதாக கடந்துவிட
செய்யும்
வித்தகவிழாவே
வா

நடைபயிற்சிகள் வேண்டியே
ஊர்திகளில் ஊர்வலம்
போவோம்

மருத்துவமனைகள்
பிணங்களை
பிரசவிக்கும்
உன்னத
முன்னேற்றம்

பசுமாட்டின்  மடியெல்லாம் பாக்கெட்டுகளிலும்
பேராறுகளை போத்தல்களிலும்
அடைத்துவிடும் அறிவியல்
எப்போதும்
வேண்டாம்

இறப்புகள்
இழப்புகள்
எல்லாமும்
எப்போதும் வேண்டாம்
செய்தியாக
கூட...

வந்துவிடு
புத்தாண்டே!

காந்தியும்
இயேசுவும்
புத்தனும்
அல்லாவும்  வந்துபோவது
அபாய காலங்களை
தாண்டியும்
இருக்கட்டும்..

மனிதமுகத்தில்
இறைவன்
காண..

வருக வருக
புத்தாண்டே வருக

புத்தாண்டே வருக

இரவல் வெளிச்சங்களில்
இமையத்தையும்
எதிர்படவைக்கிறாய்

இன்னும்
ஒராயிரம் வெள்ளம் வந்தாலும் நீரில்மூழ்காமல்
மதுவில் மூழ்கும் திளைக்கும்
மக்களை மகிழ்விக்க வா

அய்லான் முதல் ஐரோம்வரை அத்தனைபேரையும்
எளிதாக மறந்து கடந்துவிட செய்யும் வித்தகவிழாவே வா

இனி எங்களுக்கெல்லாம் காகிதத்தில் காசுபணம்தேவையில்லை
கட்டைவிரல் தேய்க்கும்
கார்டுகள் போதும்

நடைபயிற்சிகள் வேண்டியே
ஊர்திகளில் ஊர்வலம்போவோம்

மருத்துவமனைகளில் தெய்வங்களையும் மனிதர்களையும்
ஒருசேர காணும்  உன்னத முன்னேற்றம்

பசுமாட்டின்  மடியெல்லாம் பாக்கெட்டுகளிலும்
பேராறுகள் போத்தல்களிலும்
அடைத்துவிடும் அறிவியல் நாயகர்களை அதிகமாக்குவோம் அடுத்த ஆண்டுக்குள்

இறப்புகள் இழப்புகள் எல்லாவற்றையும் செய்தியாக நினைவுச் செப்பேடாக
சேகரித்துவைத்துக்கொள்ளவேனும் வந்துவிடு புத்தாண்டே!

இன்னும் இன்னும் மாறக்கூடும் மனிதர்கள் நரன்களாய்
நாளைய சமூகத்தில்!

காந்தியும் இயேசுவும்
புத்தனும் அல்லாவும் கூட பிறக்ககூடும்
அவ்வப்போது வந்துபோகும்
அபாய காலங்களில்

அவர்களை அடையாளம் காணவேனும்
விருந்தாளியாய் வந்துபோய்விடு
புத்தாண்டே வருக! வருக!