வியாழன், 24 மார்ச், 2016

ஏக்கங்களின் விதை

இமைகள் நீங்காத
உறக்கம் வந்தால் போதுமானது
இரவை கடப்பதற்கு!

ஈரத்துணியில் நீர் உறிஞ்சும் காற்றினைப்போல
உன் நினைவென் உறக்கத்தை
உறிஞ்சிக்குடிக்கிறது சலனமின்றி!

ஓடும் சக்கரங்களெனினும்
ஒட்டி முத்தமிடும் தண்டவாளமாய்
ஒற்றி ஒற்றியெடுக்கிறேன்
உன் கனவு உதடுகளில்

எப்போதேனும்
வந்தமர மாட்டாயா
என் காதோரம்
கிசுகிசுத்து குழல்கோதும்
காற்றென?

காத்திருக்கிறேன்
பாலைதான் பயணமென
பலபேர் பகன்றாலும்
பனித்துளியேந்தும் கள்ளிச்செடியின்
முள்குவிந்த இலையென!

படம்  உதவி    உமையாழ் பெரிந்தேவி

செவ்வாய், 15 மார்ச், 2016

கண்கொள்ளா காட்சி

அவர்கள் அளவுக்கு
அரிவாளோ,  கத்தியோதான் கிடைக்கவில்லை
கற்கள் கூடவா கிடைக்கவில்லை?

பாலைநிலத்திலா
நின்று வேடிக்கைப்பார்த்தீர்கள்? 

இளஞ்செடியொன்றின் வேரது
வெட்டரிவாள் கொண்டு வெட்டப்படுவதை?

போராட்டம்  போலீஸ்  தடியடி இவைகளில்
கல்மழையே குவித்துவிடும் நீங்கள்தானா
நேற்று கையறுநிலையில்?

இலவசம்,  சலுகை தள்ளுபடி இவற்றில் தள்ளுமுள்ளு,
தில்லுமுள்ளு செய்தேனும்   ஒருநொடியில்      உள்நுழைந்துவிடும்
நீங்கள் தானா
துளிர்
உயிர் வெளியேற நின்றீர்கள்
மனிதமற்ற பிணமாய்?

வரட்டும் தேர்தல்
வாக்களியுங்கள்
உங்கள் சாதிக்காரருக்கு
கத்தியிலோ அரிவாளிலோ
அனுப்பிவைக்கப்படுவீர்கள்
சொர்க்கவாசலுக்கு

அதுவரை வேடிக்கை
அனைவருக்கும் வாடிக்கை!

தேர்தல் அவசரம்

தேர்தல் அவசரம்!

ஆகவே
கடந்து விடுங்கள்
கழுத்தறுபடும் காட்சிகளை!
மறந்துவிடுங்கள்
மரண அலறல்களை!

இனி ஒலிப்பதெல்லாம்
அன்பான வாக்காள பெருமக்களே
தாய்மார்களே, 
சகோதர, சகோதரிகளே!

நான் முதல்வரானால் ...
நாங்கள் வெற்றிப்பெற்றால் ...
நீங்கள் வாக்களித்தால் ...

இவைதான்
இனி தாயக மந்திரம்!
ஓட்டு ஒலிப்பான்களுக்கிடையில்
நசுங்கியே போகட்டும் குரல்வளைகள் .

ஏனெனில் 
"தேர்தல் அவசரம் "!

ஞாயிறு, 13 மார்ச், 2016

சிறகைத்தேடி

வானம் தொலைத்த பறவையாகிறாய்!

நீ தனிமைக்கடலில்  மூழ்கிப்போகிறாய்

தொடர்பு நூலினை அறுத்தெறிந்து
தொலைவுக்கு அப்பால்
தொலைந்தும், தொலையாமலும் நீ

இக்கட்டுகள் இறுகக்கட்டிய இதயத்துடன் நீ

மிதப்பதா  ? கிடப்பதா? எனத்தெரியாமல் 
இந்த ஒற்றைச்சிறகு!

எங்கும் சுற்றி திசைத்திரும்பும்
குளிர்காற்றென

திரும்பிவா
வற்றாக்கடலென நிரப்பிவைத்திருக்கிறேன்
என் நேசமதனை..

நின்பயணம் கரைசேருமென
காத்திருக்கிறேன் 
எப்பொழுதும்
உன் வருகையைத்தேடி!

புதன், 9 மார்ச், 2016

சின்னசின்னதாய்...

வானம் பரந்ததாய் இருக்கலாம்
ஆனால் பறத்தலென்பது எனக்கானதாய் இருத்தலே
சிறகின் பெருமை.

ஆழியென
நிரம்பியிருக்கலாம் நீரும்
மிதத்தலோ, நீந்துதலோ எனக்கானதாய் இருத்தலே கால்களின் பெருமை

உலுப்பிவிடும் அளவுக்கு  காய்த்திருக்கலாம் கண்ணீர்துளிகள்   புன்னகையோ, அழுகையோ
எனது மொழியாக இருப்பதே இதழ்களின் பெருமை 

எப்போதேனும்
கேள்விகளோடும், கேலிகளோடும் கடக்கவும் கூடும் இப்பயணம்
வாழ்க்கை எனக்கானதாய் இருத்தலே பிறப்பின் பெருமை!

அதுவரை ......
எனது பதில்களுக்கும் கேள்விகளுக்கும் வாயாடி என்றே
பெயர்சூட்டி   அழைக்கும்
இந்த ஊமைச்சமூகம்!

பெயர்சூட்டுவதைவிட,
பெருமை சூட்டுங்கள்  அமைதியாகும்
பெருங்கடலின் பேரிரைச்சல் !

செவ்வாய், 8 மார்ச், 2016

எரிந்து வீழ்ந்த நட்சத்திரம்

எத்தனை சத்தமாக
ஓங்கி ஒலிக்கிறது
நெரிக்கப்பட்ட
உன்குரல்வளையின்
நொறுங்கல்கள்!

மவுனமாய் பேசியிருக்கிறாய்                             மரணத்தோடும் கூட!

விளக்குகளை கொண்டாடும்
விக்கிரகங்கள் மத்தியில்
விடிவெள்ளிகளை கண்டுரசித்திருக்கிறாய்!

எரித்தபின்னும் உன்மீது தூவப்படுகிறது
சாதியத்தின் சாம்பல்!

ஆய்வுசெய்ய திறமை
இல்லையாம்  உனக்கு
ஆச்சர்யாவின் அழுகிய வாதம்!

துரோகிகள் துரோணர்களாயிருக்கும்வரை ஏகலைவன்கள் வெற்றியென்பது தூக்குக்கயிறே!

இரங்கற்பா இயற்றுவதில்
இந்தியதேசம் வல்லரசுதான்
இன்னும் சிலநூறாண்டுகளுக்கும்

போய்வா வெமுலாவே....
ஒதுக்கீடுதான் உன்உயிர்குடித்தது. உதவித்தொகையேனும் உருப்படியாய் கிடைக்கச்செய்யுமா உயிர்குடித்த உயர்கல்விநிறுவனங்கள்?

வெள்ளி, 4 மார்ச், 2016

பயணியா

புயலாகவோ காற்றாகவோ
சட்டென கடந்துவிட
உன்னால் முடிகிறது
பயணங்களை காரணம்சொல்லி...

பிழைப்பைத்தேடி
பிரயாணிக்கும் உன்
காலடிகளுக்கு கேட்குமா?
இதயத்தின் பரிதவிப்பு நொடிகள்

உன் மூச்சுக்காற்றை முழுவதுமாக தழுவி முக்தியடைய தவமாய்
என் உயிர்குழலும் உதிரக்குழாய்களும்!

கடவுளை சந்திக்க
காத்திருக்கும் பக்தனாய்
காதலை சுமந்து காத்திருக்கிறேன்
உன் பயணப்பாதைகளெங்கும்

உன் பார்வையின் எடையில்
சிலநேரம் சிறகாய்,
பலநேரம் சருகாய் 
என்நேசம்!

எனினும் உன்னைச்சுமந்து
பறக்க எத்தனிக்கிறேன்
சாத்தியமாகிறது பறத்தலென்பது
இம்முடமான பறவைக்கும்!