வியாழன், 24 ஜூலை, 2014

உயிர்பறிப்பு

கம்பிகளுக்கும்
கண்ணாடிகளுக்கும்தான்
கண்தெரியாது என்றால்
கடவுளுக்குக்கூட
சிலநேரம்
தொலைந்துவிடுகிறது  
தூரத்துபார்வைகள்.....!!!


ஆள்  இல்லாத தடுப்பில்
எப்படி பறிக்கப்பட்டது
சின்னசிறு பூக்கள்.......

இரும்பில் செதுக்கப்பட்ட  உனக்கு
இதயம் துடிப்பது
எப்படிதெரியும்
இழக்கப்போகும் உயிருக்காய் ...!!!

தொல்லையை தவிர்க்க
எல்லைகள் வைத்தால்
எல்லைகளே எமனாகிப்போகும்
சூழ்ச்சியை எங்குபோய் தீர்ப்பது ?  

காற்றில் கேட்டது
கண்ணீரோடு
கலைந்த   உயிர்களின்
கதறல்கள்.....!!!


 கவிதாயினி நிலாபாரதி


வேண்டுதல்


உன்னை
கட்டிக்கொள்ள வேண்டியே
உன் கால்களை
கட்டிக்கொண்டிருக்கிறது
அழகு அத்தனையும்
அணிகலன்களாக.....!!!






தரிசனம்





ஒவ்வொரு முறையும்
தெருவில் வலம்
வரும்போதெல்லாம்
உன்னை ஒருமுறையாவது
வலம் வரவேண்டுமென்ற
வேண்டுதலிலேயே
கடவுளுக்கும்
விடிந்துவிடுகிறது இரவு


கடவுளுக்கும் வருத்தம்தான்
கருவறைக்குள் அமர்ந்துகொண்டு
சுமக்காமல்
உன்னை நிற்கவைத்து
பார்ப்பதற்கு ....


கடவுளும் தவம் செய்கிறார்
உன்னை பார்க்காமல்
வேறு யாரையும் பார்க்ககூடாது
என்ற வரம்கேட்டபடி...!!

புதன், 23 ஜூலை, 2014

பிரிவு







நிஜமாய்த்தான் சொல்கிறதா நிழல் .... 
என்னைவிட்டு பிரிந்துபோ என்று ? 

பேசாதே...!!! 
இந்த ஒற்றை வார்த்தை கொடுக்குதடி ..... 
இரட்டை ஆயுள் தண்டனையை 

உன் மௌனம் மெல்ல மெல்ல 
எனை கொண்டு சேர்க்குதடி 
மரணமென்னும் மணற்குழியில்.... 

உன் இதயத்தில் என்னைத்தான் 
ஒளித்துவைத்தாய் என்றிருந்தேன் 
இப்போது தெரிந்ததடி 



நான் உன் 
உதட்டில் கூட ஒலிக்கவில்லை 
உண்மையான வார்த்தைகளாய் .... 

துரத்தி வந்த என்னை விட்டு 
தூரமாய் போகுதடி 
இரக்கமில்லா உன் இதயம்... 

நான் இருந்திடவா இல்லை 
இறந்திடவா 
இரண்டில் ஒன்று சொல்லிடடி 
உன் வார்த்தை 
அமுதத்தால் ............ 

என்னுயிர் தோழிக்காக..... 


கவிதாயினி நிலாபாரதி

அழகின் உயிர்ப்பு


அழகின் உயிர்ப்பு
உன்னைத் தீண்டி 
சிலிர்ப்புடன் சிரித்துப்போகிறது 
காற்று.! 

நீ பேசுகையில் 
மௌனம் ஏங்குகிறது.. 
உன் அதரங்களால் 
அதிகமுறை 
என்னையும் பேசமாட்டாயா..!! 

எல்லாப்பூக்களும் 
ஒற்றைக்கால் தவம்தான் 
இரட்டை கால்கொண்ட 
உன்கூந்தலில் நின்றாட...!!! 


எல்லாவற்றுக்கும் சேர்த்து 
ஒற்றை வரமாய் வந்துவிடு 
வானமும் மேகமுமாய் .....

விதியா சதியா


விதியா சதியா
சுமைகளுடன் பறந்தபோது 
விழாத பறவை 
சூன்யகாரர்கள் பார்வை பட்டதில் வீழ்ந்தது... 


சூரியன் சுட்டபோது கூட எரியாத உடல் 
அசூரர்கள் சுட்டதில் வீழ்ந்தது...!! 

எரிந்தது நிஜமாய் மரத்தின் நிழலில் 
எரியும் உயிர்மெய்யை அணைப்பதற்கு 
கைகள் இல்லாமல் 

இதுவரை எல்லையில்லாமல் பறந்த 
பறவைகளுக்கும் பயம்தான் 
எங்கேனும் எல்லைக்கோட்டை 
தொட்டுவிட்டதாய் 
சுட்டுவிடுவார்களோ என்று ...... 

இப்போதெல்லாம் இறக்கைகளின் 
இறைஞ்சுதல் எல்லாம் - இந்த 
உலகம் வேண்டாம் 
இமயமலைகூட போதும் 
இதயம் இளைப்பாறுவதற்கு...!!

பாலியல் வன்கொடுமை


பாலியல் வன்கொடுமை








ஆடைகுறைத்து போகையிலும் 
அசிங்கம் என்பதில்லையடா 
ஆணுக்குமட்டும்...!!! 

போர்த்திக்கொண்டு போகையிலும் 
பின்தொடர்ந்து நிழல் வருகிறதே 
பின்புத்திக்காரர்களின் 
பிதற்றல் மொழிபேசிக்கொண்டே.... 


கழுத்தறுத்து கொன்றிருந்தால் 
கண்ணீரோடு செத்திருப்பேன் 
கருவறுத்து கொன்றுவிட்டாய் 
உயிர் கதற கதற சாகிறேனே .... 


பூக்களாய் சிரிக்கும் எங்களை 
பூஜிக்க வரம் கேட்கவில்லை 
காயப்படுத்தி கசக்கவும் 
அழிக்கவும் வேண்டாம் என.... 
கடவுளையே வேண்டுகின்றேன் 


ஆடைமாட்டி கொண்டாலும் 
உன்னிடம் மாட்டி கொண்ட 
பூச்செண்டாய் 
போவதற்கு வழியின்றி 
பொசுங்கித்தான் போனது 
முல்லையரும்பின் மூச்சுக்காற்றும் 

கொதித்தெழுந்தது போதும் 
கொளுத்திவிடுங்கள் 
பூவரும்புகளை கொள்ளையிடும் கொடியவர்களை....... 

தூக்கிலிடக்கூட துரத்த வேண்டாம் 
தூக்கிவிடுவோம் 
இந்த உலகத்தின் முகவரியிலிருந்து.....!!! 


பாரத பூமி என்று சொல்லிசொல்லி 
பழம்பெருமை பேசுவோரே 

பாரதி பூமி என்றே முழங்கிடுங்கள் 
அப்போதாவது விளங்கிடுமே 
என் அன்னைக்கும் அப்பாவுக்கும் 
பெண்ணிற்கும்வீரம் வேண்டுமென்று..... 


கவிதாயினி நிலாபாரதி


மொழியறியா வார்த்தைகள்


மொழியறியா வார்த்தைகள்




கொடுத்தே கொடுத்தே 
சிவந்துபோன 
அங்கததேசத்துக் கர்ணனாய்... 
உன் 
ஆசை முத்தங்களை 
கொடுத்தே கொடுத்தே 
சிவக்கவைக்கிறாய் 
என் அங்கதேசத்தை..... 


அழுக்காகவே இருந்தாலும் 
இன்னும் அழகாகிறேன் 
உன் ஆனந்தக்கண்ணீரில் 
நான் நனையும் போதேல்லாம் 


படைத்தவனுக்கு தெரியவில்லை 
அவனைவிட அழகாய் 
நீ இந்த உலகத்தை 
படைக்கப்போகிறாய் என்று ...... 

தெரிந்திருந்தால் பிறந்திருப்பான் 
உன் மடியில் இடம்பிடிக்க 
பிரம்மனிடம் அடம்பிடித்து .....! 


உன் இரு கைகளில் 
இருக்கும்போதுதான் 
உயிர்க்கொண்ட பொம்மையாகிறேன் 
உன்னைப்பார்த்து சிரிக்கும்போதுதான் 
உயிருள்ள கடவுளையே 
கண்ணெதிரில் காண்கிறேன் ....!!! 

இந்த உலகில் நான் 
வளரும்வரைதான் 
ரசிக்கப்படுகிறேன் - உன்னால் 
மட்டுமே 
வாழும்வரை நினைக்கப்படுகிறேன்....!! 



கவிதாயினி நிலாபாரதி !!


சுமக்கும்வரை மட்டும் தெய்வமில்லை.. 
நம்மை நினைக்கும்வரை தெய்வங்கள்தான்... 
அன்னையும் தந்தையும் !!! 

புதுசுவை


புதுசுவை


எந்த வாத்தியங்களாலும் 
இசைக்கப்படாத இசையாய் 
உன் 
கொலுசோசையும் குரலோசையும் 
இயற்கையோடு சேர்ந்து இனிக்கிறது 
தேனாக ......!!!! 





கவிதாயினி நிலாபாரதி

மாற்றம்


மாற்றம்


மரங்கள் நின்ற இடத்தில் 
இப்போது 
மனிதர்கள் நிற்கிறார்கள் 

கல் மரமாய்...!!!


வேகம்


வேகம்
உனக்காகவேனும் 
சீக்கிரம் வெந்துவிடவேண்டுமென்று 
நெருப்போடு சேர்ந்து 
தானும் வெந்தணலில் காய்கிறது 
கல்லின் மேல் ரொட்டியும்....!!!! 



கவிதாயினி நிலாபாரதி

வாழ்க்கை


வாழ்க்கை



இலேசான இதயம்தான் எவ்வளவு 
கனமான எண்ணங்களை எளிதாக சுமக்கிறது 

எண்ணங்களின் சுமைதாங்காமல் 
இதயமும் அழுத்துகையில் 
ஆசுவாசப்படுத்திக்கொள்ள 
வெளியில் வந்து வந்து போகிறது.... 
சூடான சுவாசக்காற்றும் ! 


வெளிவந்த சுவாசத்தை விட்டுவிட முடியாமல் 
முந்திகொண்டுவருகிறது 
திணறலுடன் மூச்சுக்காற்றும்.... 


எல்லையில்லா வானம்கூட 
எதற்கும் ஆசைப்படுவதில்லை 

ஆசை கொண்ட மனிதனுமே 
அத்தனையும் அடைந்து விடத்தான் 
சிறு இதயமும் துடிக்கிறதென 
சிறு பிள்ளைப்போல் நினைத்துவிட்டான் 

கொள்ளளவு குறைவுதான் என்றாலும் 
கொட்டிடத்தான் தேடுகின்றான் 
கோடி கோடி வேண்டுமென்று 
வீதிஎங்கும் ஓடியோடி.... 

அலைந்து அலைந்து திரிந்த காற்று 
கண்ணில்பட்டவன் காதில் 
ஊதிவிட்டுப்போனது ஒற்றைச்சேதி.! 

உனக்குள் இருக்கும் நான் 
உட்புகுந்தவீட்டை விட்டு 
வெளியேறினால் 
நீ நாறின பிணமடா..!! 
இதை என்று உணரும் 
உன் மனமடா....!!! 



கவிதாயினி நிலாபாரதி

ஒத்திகை


ஒவ்வொரு முறையும் 
பூக்களெல்லாம் 
ஒத்திகை பார்க்கின்றன 
ஒருமுறையாவது 
உன்னைப்போல் 
அழகாக சிரித்துவிடவேண்டுமென்று..... 

ஒத்திகையிலேயே 
தோல்வியுற்று 
மரணமடைந்துவிடுகின்றன 
மண்ணில் 
உதிர்ந்தபூக்களாய்................ 

நிலாபாரதி **************

வெற்றி


வெற்றி
எல்லா அஹிம்சைகளையும்
வென்றுவிடுகிறது
வன்முறையால் சிந்தப்படும்
சில துளி இரத்தம்......!!!