திங்கள், 25 ஜனவரி, 2016

ஜொலித்த வீதி

சிலநாட்களை சிந்தைகளில் மறக்கமுடியாது  அப்படித்தான் நேற்றையபொழுதும்,

வீடுகளுக்கு பெயருண்டு. வீதிகளுக்கும் பெயருண்டு.
வீதியே பெயராய் ஆனது வியப்புதான்! 

புதுகையின் பூரிப்பும், பெருமையும் வீதியைப்பொறுத்தே என்றால் அதுமிகையில்லை.

இப்போதும் அப்படிதான்
வீதியை உருவாக்கி விரிவாக்கம் செய்யும் வித்தகக்கலையை விதவிதமாய் செய்யும்  கவிஞர்கள் அமைப்பாளர்கள் திரு. கீதா  வைகறை  இவர்களோடு துணைநிற்கும் இமயங்களை நான் என்னவென்று சொல்வேன்? 

முதல்முறை நான் வீதிகளத்திற்கு வந்தது கடந்தமாதம் தான் .
புத்தாண்டின் பரிசாய் புதுக்கவிதை வாசித்து மகிழும் வாய்ப்பை தந்தது வீதிக்களம் .

வலைப்பதிவர் மாநாட்டில் கண்டைந்தேன் பல நல்ல மனிதர்களில் நட்புகளை...

அப்பப்பா அசந்துபோனேன் பல புதிய மனிதர்களை புதுகை புதையலாகக்கொடுத்தது என்னவோ நான் செய்த தவம்தான்!

மதுரைக்குச்சென்றிருந்தேன் சொந்தப்பணியாக இம்மாதக்கூட்டத்தில் நானும்  கூடடைவேனா என்ற அச்சம்வேறு...
என்றாலும் ஒரு நம்பிக்கையில் மூன்றுமணிநேரம் பயணித்து  வந்துசேர்ந்தேன் சங்கத்தமிழ்வளர்த்த மதுரையிலிருந்து பொங்குதமிழ் வளர்க்கும் புதுகைக்கு!

பூ மலர்வது போல அவ்வளவு மகிழ்வு தேவதா எனும் தேவதையின் முகத்தில்
சிறப்புத்தரிசனமாய் சிறப்பு அழைப்பாளர் திரு வெங்கட் நாகராஜ் அவர்களின் அறிமுகம் பெருமகிழ்ச்சி கொண்டது மனம்!

மேகத்துளிகள் ஒன்று சேர்ந்து மழையாவதுபோல 
கடலானது களம்!
கவிஞர்கள் வருகையால் ....

தொடங்கியது ...
படித்ததில் பிடித்ததை
பகிர்ந்தது பிடித்தது பகிர்ந்தவர்களையும் சேர்த்தும் பிடித்தது .

வரவேற்புரையை திரு. கீதா  அவர்கள் துவங்க அப்புறம் ஆரம்பித்தது பாருங்க அடைமழை!

ஓவியாவின்  
"உதிரத்தை உலுக்கச்செய்த வெண்மணிக்கொடுமைப்பற்றியப்பாடல்
சோலச்சியின் "மானமுள்ள தமிழினமே " என இழந்த ஒன்றின் இருப்பை தெரிவிக்கும் பாடல்!

கூடவே முன்னத்திஏராய் விளங்கும் முத்து நிலவன் அய்யாவின் கருத்துக்களும் சுவைசேர்த்தது .

கவிதைக்களம் புகுந்தேன் நானும்!  கொஞ்சம் பதற்றத்துடனும் நிறைய நம்பிக்கையுடனும்!

சமூகத்தின் அவலங்களை தோலுரிக்க சாட்டையை சுழற்றுவதென முடிவுசெய்து தான்

"வீணாபோன வேட்டி,  சடுகுடு " எனும் கனல்கக்கும் கவிதைகளை தேர்ந்தெடுத்து வாசித்த நான் கொஞ்சம் அல்ல
நிறைய வேகமாகவே வீசிவிட்டேன் சாட்டைகளை!

சட்டென்று மின்னி சடுதியில் மறைந்த மின்னலாய் பலரின் மனம் தொட்டுப்போனதை பிறகுதிர்த்த கருத்துக்களில் கண்டுகொண்டேன் .

இன்னும் பொங்கலுக்கு சர்க்கரையாய்,
பாலுக்கு  தித்திப்புகூட்டும் தேனாய்,  தேடும் திரவியமாய்
நண்பர் செல்வா மற்றும் மாணவக்கவிஞரின் கவிதைகளும்  களம் கண்டது.

அத்தனைப்பேரின் பாராட்டே எனக்கு  அரசவையில் பொற்கிழிபெற்றதொரு பூரிப்பு! 

அப்படியே சிலாகிக்க சிறுகதை,
துரைக்குமரனின்
உப்புவேலியின் ஓர்அறிமுகம்

"உள்ளுவதெல்லாம் உயர்வுள்ளல்" என்ற வள்ளுவனின் வாக்கை நாக்கால் மட்டுமல்ல மனதால் எண்ணிக்கொண்டால் வெற்றிஎன்பது  விண்ணளவு தூரமில்லை என்பதை தனதனுபவத்தால் பதியவைத்த பண்பாளரின் பதிவுகள் .

ஆசிரியராய் இருந்தாலும் கற்பிப்பது  மட்டுமல்லாது     வாசிப்பை பிறருக்கு ஒப்பித்தலும் ஒரு பயனே என ஹார்டியை பற்றிய பலதகவல் பகிர்ந்து வியக்கவைத்தார் நண்பரும் சகோதரருமான திரு.கஸ்தூரி அவர்கள் .

ஒருநாள் பார்வைக்கு பிறகு இவ்வளவு நேசம் சாத்தியமா?  எனத்திகைத்திருந்த வேளையில் என்னை நட்பில் திளைக்கசெய்த மைதிலியை எண்ணி மீமகிழ்ச்சியடைந்தேன் கூடவே அவரது பாராட்டுகளும்!

இடையில் இதமாக அளிக்கப்படட நவதானிய சுண்டல் சூப் என்று இன்னும் நிகழ்ச்சியை சொர்க்கமாக்கிப்போனது .

சிறப்புவிருந்தினர் சிரிப்பால், சிந்தனையால் வசீகரித்த வலைப்பதிவர் திரு.வெங்கட் அவர்கள் செலவில்லாமல் எல்லோரையும் சுற்றிப்பார்க்கவைத்துவிட்டார் தன்  பயணஅனுபவங்களால்   
எங்கள எல்லோரையும் வார்த்தைகளால் விரல்பிடித்தபடி!

அவர் கூறிய அத்தனையிலும் என்னைக்கவர்ந்தவை இவை
தீப்பற்றி எரிகையிலும் இயற்கையை சபிக்காமல் ரசித்துபழகிய மக்கள்!

"யாரோருவர் வரக்கூடும்  தன்னைத்தேடி தேநீர் பருகுதல் மூலமாக  வெம்மையைஏற்றிக்கொள்ள தன் நம்பிக்கைக்காவேனும் அதிகாலை  தீமூட்டும் தேநீர்கடைக்காரர் எனக்கு  காட்சியற்ற கடவுளாகவே தெரிந்தார் "
"பார்வையில் ஆயிரம் கதைசொல்லுவார் 
படித்தவர்தான் அதை பதிந்தும்விட்டார் என்பதைப்போல காணும் காட்சிகளால் கவிதையோ கட்டுரையோ ஏதோ ஒன்றை எழுதவும் சொல்லிக்கொடுத்தார் .

நிறைவு செய்வதற்கு முன் நெஞ்சங்களை மட்டுமல்ல வயிற்றையும் நிறைக்கச்செய்தவர் திருமிகு நீலா அம்மா! 

தலைமைக்கும் தகைமைக்கும் பூக்களோடு புன்னகையை பூச்செண்டோடு பரிசளித்தார்கள்  செல்வா அவர்களும் புதுகையின் புத்தாண்டு வாழ்த்தாக!

வரகரிசி பாயாசம் வாழைப்பூ வடையென வழங்கி மனம் நிறைத்தார்கள்  திருமிகு. நீலா அம்மாவோடு    திரு.வைகறையும்

பூக்களெல்லாம் ஒன்று கூடி புகைப்படகருவியின் கண்ணாடிபார்த்து சிரித்துக்கொண்டோம்  புதுகைசெல்வாவின் பேரன்பு பெருமுயற்சியால்!

வீதி களம் விரிவாக்குவோம் வியக்கட்டும்!
அந்த விண்ணுலகும் இந்த விஞ்ஞான உலகத்தோடு சேர்ந்தே!

4 கருத்துகள்:

  1. இனிமையான சந்திப்பு... அனைவருக்கும் வாழ்த்துகள்...

    பதிலளிநீக்கு
  2. எனது பக்கத்தில் பகிர்ந்திருப்பதோடு, நண்பர் வெங்கட் நாகராஜ் பதிவிலும் சேர்க்கச் சொல்லியிருக்கிறேன். கவிதையில் நல்ல முன்னேற்றம். தொடர்க.

    பதிலளிநீக்கு
  3. அன்றைய நிகழ்வினை மிகச் சிறப்பாக பகிர்ந்துள்ளீர்கள்.... பாராட்டுகள்.

    உங்கள் அனைவரையும் சந்தித்ததில் மகிழ்ச்சி.....

    பதிலளிநீக்கு
  4. அன்றைய தினம் உணர்ச்சிகரமான கவிதையொன்றை ’வீதி’யில் வழங்கியதற்கு எனது பாராட்டுக்கள். நீங்கள் வாசித்தபோது நான் மேடையில் இருந்தேன். உங்களது வலைத்தளத்தினை தேன்கூடு, INDI BLOGGER (TAMIL) போன்ற திரட்டிகளிலும் இணைக்கவும்.

    உங்களுடைய இந்த பதிவினை எனது பதிவினில் சுட்டியாக காட்டியுள்ளேன். வாழ்த்துக்கள்.

    பதிலளிநீக்கு