புதன், 25 நவம்பர், 2015

முகமூடி மனிதர்கள்

நாடகம் முடிந்த பின்னும் கூட
ஒப்பனைகலைக்காத உன் வேசம்

நம்பவேமறுக்கிறது
எத்தனைமுறை புரண்டழுதபோதும்!

தேர்ந்தெடுக்கிறாய் தேவைக்களுக்கேற்ப பொருட்களைப்போல மனிதர்களையும்

அணிந்துக்கொள்கிறாய் முகமூடிகளை
அவ்வப்போதுக்கான  நிறங்களில்

என்றாலும் ஆயுள் வரை நிலைக்கப்போவதில்லை - உன்
நிஜம் பூசாத ஒப்பனைகள்

ஒளிந்தே பழகிய உனக்கு
உண்மையாக வாழ்வது
உண்மையில் கடினம்தான்

கழற்றியெறியப்படக்கூடும் 
காலத்தின் சுழற்சியில்  நீயும்
நிறமிழந்த முகமூடிக்கூடுகளாய் !

நிலாபாரதி

மிதக்கும் வானம்

பத்து நாள்மழை தான்
பரிசல் ஓட்டும்  அளவுக்கு
தெருக்களெல்லாம் தீவுகளாகிப்போனது பெருங்கதை

கரைகடந்த புயல்
இப்போது தரைக்கடக்கவும் மறந்துபோய்

மயங்கியே கிடப்பதென்ன அடுக்குமாடி அறைகளுக்குள்  

ஒவ்வொரு புயலின் போதும்
தன்னைத்தானே புனரமைத்த பூமிக்கா சீரமைப்பென்பது சிக்கலாகிப்போனது இன்று?

முதல் உலகப்போர் துவங்கி மூன்றாம்  உலகப்போர் மூளும் வரை நீரினால் நீர்த்துப்போன கதைகள் ஏராளம்!

தானே புயலில் தப்பித்த
தளிர்கள் கூட தரைமழையில்
தப்பிக்க இயலாமல் தண்ணீரில் தரைமட்டமானதென்ன!

ஐந்துமுறை இடைவெளி ஆண்டுகளில் 
அடைமழை பெய்தபோதும்,  
அமுதமழை பொய்த்தப்போதும்
தவிக்காத மக்களா  இன்று  தவித்துப்போகிறார்கள் தண்ணீரில்?

ஆற்றங்கரையில் நாகரீகம் கற்றவர்கள் இன்று இடுப்பு வேட்டிக்காய் இன்னொருவரிடம்
இரவல் வாங்கும்நிலை!

காலிக்குடங்களுடன் கையேந்தியவர்களின் கண்களில் நிரம்பியிருக்கின்றன கண்ணீர்குடங்கள்!

இரத்தநாளங்களையும் தொப்புள்கொடிகளையும் அறுத்தவர்களை அடையாளம் காணத்தான்   விலாசம் தேடி வீட்டுக்குள் ஒளிந்துகொண்டதோ  மழை! 

கடோத்கஜ  துவம்சமாய்
துடைத்தெடுத்து ஓடிக்கொண்டிருக்கிறது கழிவு நீர் கழுவா நீர் அத்தனையிலும் மழை

ஓட்டத்தின் கால்களை முறித்தவர்களை, மறித்தவர்களைத்தான் மழையாகமாறி பறித்துக்கொண்டிருக்கிறது உயிரோடு வாழ்வதனை!

அணைகள் கட்டிக்காத்தவர்கள் என்ற பெருமையை வரலாற்றில் வைத்துக்கொண்டு
ஆற்றையும் ஏரிகளையும்

தொலைத்து விட்டு
தொடைநடுங்கி நிற்கிறோம்..

காலம்  வகுத்த வழிதெரியாமல்
மக்களோடு சேர்ந்து
மிதக்கிறது வானம் 
கண்ணீரெனும் மழைநீரில்!

விழி நீர்க்கே அணைக்கட்ட அறியாதவர் நாங்கள்
ஏரிகளில் இருந்துகொண்டு

எங்கிருந்து கட்டுவது 

வடிநீர் மழைக்கென்று அணை?

செவ்வாய், 24 நவம்பர், 2015

நீர் சூழ் உலகு

மனிதனுக்கு மறந்தும்போகும்
மரத்துப்போகும்
மழைநடத்தும் பாடங்கள்

நீச்சலடிப்பதையும்
நீர்பிடிப்பதையும் மறந்தே போனோம்
தத்தளிக்கிறோம்
தண்ணீருக்காய் தண்ணீரில்

ஆற்றில் குளித்து ஆயுள் வளர்த்தவர்கள்
ஆற்றை தூர்த்து அடுக்குமாடி நட்டவர்களாக மாறிப்போனார்கள்

ஆயிரம்முறை கூடி ஆய்வு நடத்தியவர்கள் காதுகளுக்கு ஆற்றின் காலடியோசை கேட்டதேயில்லை இதுவரை

மணல்லாரிகளில் அழுதபடி ஓடிக்கொண்டேஆறுகளின்
அலறல்களை
அரைநொடியேனும்  கேட்டதுண்டா?

அபயக்குரலின்  அழுகை மட்டும்
ஆகாயத்திற்கு  எப்படிகேட்கும்?

மிதக்கும் மனிதர்கள்
மூழ்கிப்போன கட்டிடங்கள்
நீரைகிழித்துச்செல்லும் இயந்திரபடகுகள்

கரைகளில் நின்றபடி  கரையேறவழியின்றி
கண்ணீரிலும் தவிக்கும் மக்கள்

தீயணைப்பு,    ராணுவம்,
பேரிடர் மேலாண்மை இன்னும்பிற

எப்படியோ? 
ஆட்களை மட்டுமல்ல
ஆறுகளையும் ஏரிகளையும்
எப்படியாவது காப்பாற்றிவிடுங்கள்

தொப்புள் கொடிகளை அறுத்துவிட்டு தொடர்பில்லை சொல்லாதீர்கள்

ஏனெனில்
நீர்சூழ் உலகு  மாறவும்கூடும்
போர்சூழ் உலகாகவும் !

திங்கள், 23 நவம்பர், 2015

புயலாய் கடந்த நீ

நீரும் காற்றும் 
நிரம்பிய குமிழியாய்
இரண்டற 
எனக்குள் நீ!

உடைபடுவதென்னவோ நான்தான் உன் நிறமிழக்காத நினைவுகளால்

என்றோ ஒருநாள் 
துளியென விழுந்த  நீதான் 
இன்றைய  அடைமழையென 
நனைத்துக்கொண்டிருக்கிறாய்!

வழிந்தும் வற்றிவிடாத 
மழைத்துளி நினைவுகளால் 
உலரமறுக்கிறது  
ஈரம் ஈர்த்த களிமண் இதயம்

சலனமற்று  கவனமற்று  எனைக்கடந்துப்போகிறாய் 
சுழலத்தொடங்கியது எனக்குள் 
சூறாவளியும் பெரும்புயலும்!

முத்தங்கள் நிரம்பிய கோப்பை

இராப்பகல் இணையும் இடைவெளியில்  சந்தித்தோம்
இருவரும் ஒருவெளியில்
பனிமழை பொழியும் மரக்குடைக்குள்!

உன் விரல் கோர்த்துநடக்கையில்
நம் நிழல்சேர்ந்த வெப்பத்தில்
உயிர்காற்று உருகி
வழித்தெரியாமல் வழிந்தோட காண்கிறேன்!

மயங்கிப்போன மனதை உறங்கவைக்க இன்னும் தேவைப்படுகிறது
இரு கோப்பைகளின் தேனீர்

பால்மழை பொழிகிறாய்  பார்வைகளின் பரவசத்தால்...

தேநீரை முந்திக்கொடுத்துவிட்டு  உன்  முத்தங்களை நிரப்பிக்கொள்கிறது ..


வெற்றுக்கோப்பையல்ல - இது
முத்தங்களின்
மொத்தக்கோப்பை!

கோப்பையெங்கும்                                            நிரம்பிஇருந்தது  -உன்
எச்சில்நனைத்தமுத்தங்கள்!

ஞாயிறு, 22 நவம்பர், 2015

வரமாய் நீ!

என்னில் சுழல்கிறாய்
என்னைச் சுழலவும் வைக்கிறாய்

சேய்விரலாய் தாய்க்கரமாய்
தீண்டிப்போகிறாய்
புலர்வெயில் தொடும் பனியென உருகிப்போகிறேன் - உன் பெயரிடப்படாத பேரன்பில்!

நினைவுகளை உன் விரல்களாய் பற்றிக்கொண்டு நடைபயில்கிறேன்
நீள்கிறது நெடுஞ்சாலையென
என்கனவுப்பயணம்!

தீப்பற்றி எரியாத நினைவில்
தீண்டும் நிலை தொடராத உறவில்
இறுகப்பற்றிக்கொள்கிறேன்
விலகாப்பிடியாய்!

இதுவரை நம்பவில்லை
இறைவனாய் முழுதாய்
இனியோர் வேண்டுதல்
புதிதாய் அவனிடம்

இறக்கும் நிலையினும்
உன்னை இழத்தல் என்பது
நிகழவே கூடாதென்பதே!

செவ்வாய், 17 நவம்பர், 2015

நீ சூழ் உலகு

கவிதையென்றால் கதவடைப்பவர்கள் மத்தியில் நீ ஜன்னல் திறக்கிறாய் ...
என் வானம் விரியக்காண்கிறேன் நான்!

யாருமற்ற ஓருலகில்
யாவுமாகிறாய்
நீர் சூழ்ந்த இவ்வுலகில்
நீ சூழ வாழ்கிறேன்
தீவென உன்னினைவில் மிதந்தபடி

முடங்கிப்போன என் காலத்தின் சக்கரங்களாகிறாய் ....
சுற்றுகிறேன் திக்குதிசை தெரியாமல் திளைத்த   மகிழ்ச்சியில்!

அத்தனை விண்மீண்கள் அவதரிப்பினும்
துருவ நட்சத்திரம் நீயாகிறாய் - என் ஆகாயமண்டலத்தில்!

உடலைதுறந்துவிட்டு
உயிர்மட்டும்  உன்னோடு சுற்றிவர ஆசைக்கொண்டேன்!

ஆண்டாண்டு காலங்கள்
போனால் என்ன?
அரைநூற்றாண்டு
ஆனால்  என்ன?

வரலாறுகள் எழுதாமல்கூட போகட்டும் உன்னைப்பற்றி

என்வரலாறு என்பதெல்லாம் உன்னைப்பற்றியதை பற்றியே....

அது ஒரு மழைக்காலம்

அன்றைய ஐப்பசிதிங்கள்தான் இந்தவருடமும்  

இரு பத்தாண்டு இடைவெளிகளுக்குள்தான் 

இவ்வளவு வேறுபாடு

படகென மிதக்கிறது 

பார்போற்றிய ஒரு மாநகரம்!


எட்டிஎட்டிப்பார்த்ததில்லை

ஏதேனும் பொட்டலங்கள் போடப்படுமா என்று!
அறிவிப்புகள் வருமென்று அடைக்காத்துகிடந்ததில்லை

வெள்ளிமேகங்களையும் வெளிவாங்கிய வானத்தையும்
விரும்பியதில்லை -  எம்  வெள்ளாமைபெருங்கூட்டம்!

அடைமழை என்றால்
அவ்வளவு  ஆனந்தம்
அரையாடை உழவனுக்கு!

ஒட்டுபோட்ட ஒற்றை வேட்டிதான் ஒட்டுமொத்த ஆடையென காலம் 

ஒழுகும்  குடிசைக்குள்தான் ஒன்பதுபேரின் உயிர்வாசம்!

அடைமழைக்கு இதமாக
சுடச்சுட சுக்குக்காபி
சூடான பலகாரம்
மணமணக்கும் மீன்குழம்பு
மல்லிகைபூவாய் இட்லி
வட்டில் கறிசோறு
வட்டமாய் ஒருமாநாடு!

 சொற்பத்தைக்கொண்டு சோறென்னும் சொர்க்கம்    படைக்க அவளால் மட்டுமே முடிந்தது

இடைவிடாமல் பெய்தபோதும்
இரவல் என்று கேட்டதில்லை

குடிசைகள் நனைந்தபோதும் குடைபிடிக்க முனைந்ததில்லை

எத்தனை நாள் பெய்தபோதும்
எப்போதும் புகுந்ததில்லை - எம் வீட்டுக்குள் மழை.!
அனுமதியின்றி நாங்கள் மழைக்குள் புகுந்ததைத்தவிர

  

அன்று மகிழ்ச்சியில்  தளும்பிய அதேமனம்தான் 

இருபது ஆண்டு
இடைவெளியில்
மத்தியிலிருக்கும் மாநகரில்
தளும்புகிறது தண்ணீரிலும் கண்ணீரிலும்!

குளிருக்கு உயிர்நடுங்கும்

ஒருமகனை காப்பாற்றி 

கைசேர்க்க இயலாமல்  

நீந்திக்கொண்டிருக்கிறேன் கவலையுடன் கண்ணீரில்...

குளங்களில்
மீன்பிடித்த காலம் போய் ஆள்பிடித்துகொண்டிருக்கிறோம்
ஆயுளைபிடித்துக்கொள்வதற்காக..

வெளியில்சென்று வந்து  

என்  இருப்பிடத்தை தேடுகிறேன்
வழிமறித்துச்சொல்லிவிட்டு  

வழிதேடி ஓடியது  ஆறு

"நானும்   அதைத்தான் தேடுகிறேனென்று .."
கண்ணீரை கடலளவு சொரிந்துகொண்டு!

கலங்கியநீரில் நின்று  

தெளிந்தவானத்தை பார்க்கிறேன் 

    
"அது ஒரு மழைக்காலம் "

சனி, 14 நவம்பர், 2015

மழை வாங்கிவந்தவள்

வண்ணக்குடைகொண்டு 
போகிறாள் பொம்மி
துரத்தும்  மழைமேகங்களுடன்! 

அவள்கால்களில் தன்னை   தழுவிக்கொள்ளத்தான்
தத்தித்தத்தி ஓடிவருகிறது மழைமழலை!

கப்பல்விடும் பொம்மிக்கு
 வழிந்தோடும வாய்க்கால் கூட 
கடலாகிப்போகிறது!

திசைப்பற்றிய பயமில்லை மாலுமியாகும் எண்ணமில்லை
என்றாலும் அலைகளில்லாத கடலில்விடும் காகித கப்பல்தான் அவளை மகிழ்ச்சியில் மூழ்கவைத்து
மிதந்தபடி ஆடிப்பாடி செல்கிறது!

விடுமுறைகள் தேவையில்லை
விளையாட (டி) ச்செல்வதற்கு ...

வீதியோடும் வீட்டோடும் விருந்தாளியாய் வந்துபோகும்
வான்மழைபோதுமென்கிறாள்
ஜன்னலோரம் பேசும்  சாரல்மொழிகற்றுரசிக்கிறாள்

குடையோடு கரை கடந்து
முற்றத்தில் நுழைகிறாள்
அவளை எட்டிபிடித்து
முத்தமிட்டு முழுதாய்
 முத்துக்குளித்துச்செல்கிறது மழை! 

கடவுளைக் கண்டேன்

1.அலாரமில்லாத துயிலெழுதல்

2.பரபரப்பில்லாத அடுக்களை.

3.அவசரகதியில்லா காலை உணவு

4.நெரிசலில்லா பேருந்து பயணம்

5.சேறும் சகதியுமாகாத மழைநீர்

6.ஒழுகாத ஓட்டுப்பள்ளிக்கூடம்

7. அதட்டலில்லாத ஆசிரியை

8.ஒருவேளையாவது விரும்பிய
    உணவு

9.விழிக்கும்முன்னே விடுமுறை
   அறிவிப்பு

10. மணியடித்ததும்       எட்டிபிடிக்கும்     தூரத்தில் வீடும்  வானும் ...!

இத்தனைகனவுகளை சுமந்ததாய் புத்தகமூட்டையுடன்
எனது பயணத்தை இலேசாக்குகிறது
கதவோரத்தில் நின்று கையசைத்து சிரிக்கும் குழந்தை!


வியாழன், 12 நவம்பர், 2015

என்னைக்கண்டெடுத்தவன்

என் வானத்தில் எப்போதோ   தோன்றவேண்டிய விடிவெள்ளியென நீ!
நீல (ள)கடற்கரையில் காலருகேவந்து கட்டியிழுக்கமுயற்சிக்கும் பேரலைக்கு நடுவே என்னைமுத்தமிட்டு முழங்காலிட வைத்த சிற்றலை நீ 
உன்னைப்பற்றியும்  எழுதப்போகிறேன் 
உன்னை பற்றியும் வாழப்போகிறேன்
 விரைவில் விழித்தெழத்துவங்கும் 
என் அத்தியாயங்கள் அத்தனையிலும் நீ அறிமுகமாகிறாய் புதுமுகமாய் 
 என் புதுயுகமாய்....

காத்திருங்கள் என்னைக்கண்டெடுத்த பொக்கிஷம்  அவன் என்னை பொக்கிஷமாய் மாற்றுவதைக்காண

செவ்வாய், 10 நவம்பர், 2015

தீராவலி

எப்போதுமே அழுதுகொண்டே பிறக்கிறது தீபாவளி
எந்தவருடத்திலும் கொடுத்துவிடப்போவதில்லை
என்போன்ற
ஏழைக்கான புன்னகையை!

அரையிருட்டில் அச்சுஅசலாய்
அதிரசமும் ஐநூறு நெய்முறுக்கும்
அடுக்கடுக்காய் வைக்கப்பட்ட
மத்தாப்புபெட்டிகளும் பட்டாசுகளோடு மின்னும் பட்டாடைகளும் மொத்தமாய் வாங்கிக்கட்டிக்கொள்ளத்தான் வகைவகையாய் தோன்றுதடி
ஆயிரக்கணக்கில்!

எட்டுநாளைக்குமுன்னே எண்ணியெண்ணி எடுத்துவைத்த எட்டணாகாசெல்லாம்
எடுக்கப் போய் நிற்கையிலே
எட்டாக்கனவென்று கைக்கொட்டிச்சிரிக்குதடி

அடிவயிற்றின் வலிதாளாமல்
அழுதுபுரளும்  அண்டைவீட்டு
அம்முவின் அழுகுரலில்
அதிரடித்த சத்தமெல்லாம்
சுத்தமாய் ஒடுங்கியேபோனதடி

ஆண்டாண்டு காலமாய் ஆண்டவரிடம்
கிடைக்காத விடுதலையும் கிடைத்துவிடும்
இனாம்தொகையும் இனிப்புகளும்
எப்படி ரசிக்கவும்
ருசிக்கவும் செய்யும்
தீபாவளி எனும் இந்த
தீராவலியை?
.