வியாழன், 31 டிசம்பர், 2015

புத்தாண்டே வருக வருக

பனிரெண்டு மாதங்கள்தான்
மாற்றமேதுமில்லை
எண்களிலும் எண்ணத்திலும் ஏதோ கொஞ்சமாய் நிகழ்வதைவிட

நாட்காட்டிகள்
முகம்மின்ன ஒவ்வொருநாளாய் உடல்கிழியும் பரிதாபம்!

பட்டாசுகளை கொளுத்தி மத்தாப்புகளை சிதைக்குகொடுத்து சிரித்துமகிழும் சீர்மரபினர் நாம்!

பிறப்புகளை பற்றி பெரிதாய் எண்ணாத நாமா இறப்புகளைபற்றியும்
இழப்புகளைபற்றியும்
பதைபதைக்கப்போகிறோம்

இருளை விலக்காத விஞ்ஞானம்
இரவைவெளிச்சமாக்க விந்தைவிந்தையாய் வெளிக்கொணர்ந்தது வெகுமதியென
வெளிநாட்டவர்
கொண்டாட்டங்களை!

முந்நூறு நாட்கள்
மூன்றுமாதங்கள்
மூழ்கடித்த அத்தனை மரணவெள்ளங்களை மறந்தவர்கள்நாம்

மரக்கட்டைகளாய் சுட்டு எரிக்கப்பட்ட
மறத்தமிழர்கள்

திரையுலகில் மின்னிய ஒளிவிளக்குகள்
அணைந்துபோய் ஏற்றப்பட்ட ஆழ்ந்த இரங்கல்கள் மெழுகுவர்த்திகள்!

வியாபம் ஊழல் முதல் விஷ்ணுபிரியா வரை அவிழ்க்கமுடியா அவமான முடிச்சுகள்!

பசுவதைக்காக படுகொலை அரங்கேற்றம்
எதிர்த்து பேசிவிடுமோ எனும்ஐயத்தில் எரித்துக்கொல்லப்பட்ட தலித்தளிர்கள்!

மாதொருபாவம் செய்துவிட்டதாய்
அகதியாக்கப்பட்ட அவலம்
பேனாமுனை முறிக்கப்பட்டு
கருத்து கனவான்கள் கழுத்தறுக்கபட்ட
கண்ணியமிக்க பூமியிது

இந்தியா வல்லரசாகுமா என ஆசைக்கனவு கண்ட கலாமை கரைத்துவிட்டுதான் அறமே இல்லாத அரசாட்சி!

பிட்டு அடித்தே பாடம் கற்றுக்கொடுத்த பீகாரின் பேரவலம்
சாலைகளிலும்
உறங்கமுடியாமல் குரல்வளைநெரிக்கும்
சல்மான்களின் குறட்டைசத்தம்!

அப்பப்பா
அத்தனையும் துடைப்பதற்காக வந்தது ஒரு பெருமழை  மனிதப்பிழைஎனும் அடைமொழியோடு!

அடங்கியதா இந்த உலகம்
அழுக்ககலாமல் அழகாக்கிகொள்ளும் அலங்காரம் படித்தவர்கள் நாம்!

வருக புத்தாண்டே வழக்கம்போல
தண்ணீரில் மூழ்கி
தன்னிலை மறக்க
எப்போதும் போல
வருக வருக!


புத்தாண்டே வருக

என் வாழ்வில் எத்தனயோ தடுமாற்றங்கள் ஏமாற்றங்களை தந்த இந்த ஆண்டு மறக்கமுடியாத மனிதர்களையும் நண்பர்களையும் முன்னேற்றங்களையும் தந்துள்ளது
என்பதில் பெருமையடைகிறேன்
வருக
வசந்தமெனும் கனாக்காலமே
முகநூல் உண்மையாகவே இவ்வளவு அன்பை அள்ளித்தரும் அட்சயபாத்திரமா?
தேய்க்க தேய்க்க புதையல்களை புன்னகைகளை பரிசளிக்கும் அலாவுதீனின் அற்புத விளக்கா?
அன்பை,  நட்பை,  நேசத்தை அளவில்லாமல் கொட்டிதந்துவிட்டுப்போகும்
காட்சிகுழந்தையென கடக்கவே முடியாமல்

கடந்த வருடத்தைக்காட்டிலும்
இந்த வருடம் இழப்புகள் அதிகம்
எனினும் எதையும் தாங்கும் வலிமைகூட்டியிருக்கிறது  இவ்வருடம் .

எதிர்பார்ப்புகளையும் ஏமாற்றங்களையும் பரிசளித்திருந்தாலும் அதைக்காட்டிலும்
அன்பையும் நம்பிக்கையையும்  பகிர்ந்தளித்த நட்புகளையும் உறவுகளையும் நன்றியுடன் நினைவுகூர்கிறேன்!

எதிர்பாராமல் ஏற்பட்ட உடல்நலக்கோளாறு ஒட்டுமொத்தமாய் எனை சிதைத்துப்போட்ட நிலையிலும்
சிரமேற்று எனைத்தாங்கிய என்பந்தங்களும் உறவுகளும் கைக்கொடுத்தாலும்
என்னை தன்னைப்போல் எண்ணி பார்த்து மீண்டும் இயல்பாய் இயங்கவைத்த தோழி மதுரைசத்யப்ரியாவுக்கு அவளது குடும்பத்துக்கும்  என்முழு நன்றிகளை உரித்தாக்குகிறேன். (நன்றிமறப்பதுநன்றன்று)
அத்துடன் கடந்தவருட பட்டியலில் மட்டுமல்லாது மனதில் இன்றளவும் நீங்காது நிறைந்திருக்கும்
முகநூல் நண்பர்கள்,  எனது அலுவலக சகாக்கள் மற்றும் உறவுகளை புதுப்பிக்க வாய்ப்பளித்த அத்தனை பேரின் அக்கறையிலும் இன்றும் சுகமே!

அபாயத்தின்போது அபயக்கரம் தந்து உபாயம் செய்த ஒவ்வொரு முகநூல்  முகமறியா தோழமைகளுக்கும் 
வரும் பனிரெண்டு மாதங்கள்  வசந்தமாய் மாறட்டும் என வாழ்த்துகிறேன் மனமார!

மறக்கவே முடியாத மனிதர்களில் நண்பர்களில் மனதை நிறைத்துக்கொண்டவர்கள்

இந்தவருடம்

வலங்கைமான் நூர்தீன்
சுதாமகேசுவரிசுதா
மெளலிபோபன்
கவி.வளநாடன்
சுப்ரா வே.சுப்ரமணியன்
ஆரூர் செ.கர்ணா
முகில்நிலா
எழில்அருள்
வைகறை வைகறை
பூபாலன்
சோலைமாயவன்
புன்னகை அம்சப்ரியா

பெருவெள்ளத்தில் கிடைத்த முத்துக்கள்
அகிலா புகழ்
சுபாஹரண்
வேதா நாயக்

ஞாயிறு, 27 டிசம்பர், 2015

குழந்தையின் கூக்குரல்

கடல் அன்னையே!
நான்
குழந்தையாய் பிறந்ததின்
குற்றமென்ன?

பெற்றவள் அணைக்குமுன்
என்னை அழிக்கத்துடித்ததென்ன?

உன் கோரப்பசியின்
கொடூர விரல்களுக்கு
குழந்தையின் குரல்வளையா
உணவாய் கிடைத்தது?

என்னைப் பெற்றெடுக்க
தாய்பட்ட வலியைவிட
நீ
சவமாய் என்னை பிரித்தெடுக்கையில்
அவள் பட்ட வேதனைதான் அதிகம்

முத்துக்களை பிரிக்கும் உன்னில்
சிறு மொட்டுக்களின் உயிர் பறிக்க
உனக்கேன் ஆசை?

மடிந்தபின்னும்
மரண ஓசைக்கு ஓய்வில்லை
குரல்களில் ஈரமில்லை

எல்லாம் வற்றிவிட்டது
மண்ணிலா ?
உன்னிலா?

கவிதாயினி நிலாபாரதி

2004 -ம் சுனாமி பாதிப்பின் போது டிசம்பர் 26- அன்று நான் எழுதிய மழலைகளின் மரணத்தின் போது கவிதை இது......

துளித்துளியாய் ஒரு பெருவெள்ளம்

*
ஆர்ப்பரித்த அலை
அடங்கிப் போனது
ஆறறிவும் ஐம்புலன்களும்
அரைநொடிக்குள்!

*
அத்தனை மன்னர்களும்
அசந்துபோகும் அசாத்தியம்
அமைதியான
உன் போர்ப்பயணம்!

*
நீ கரையேறுகிறாய்
மூழ்கிப்போகிறோம்
நாங்கள்!

*
ஊன் புசித்த நாங்கள்
உன் எதிர்வினையாய்
எங்கள்
உயிர்புசித்தாய் நீ!

*
வெற்றியாளர்களின்
வெற்றியிடத்தை
வெற்றிடமாய் ஆக்கிப்போனாய் நீ!

*
ஓடியதென்னவோ நாங்கள்
ஜெயித்ததென்னவோ
கால்களில்லா நீ!

*
பல ஆண்டுகளாக
மழைபெய்யாத சோகத்தை
தீர்த்தது .....
தீராமல் பொழியும்
எங்கள் கண்ணீர்!

கவிதாயினி நிலாபாரதி

புதன், 16 டிசம்பர், 2015

இன்றும் காத்திருக்கிறேன்

பூட்டிய கதவு ..
திறந்திருக்கும் வாசல்
துாரத்து உறவுகளுக்கு
துாண்டில் பாலமாய் நீ !

காதலோடு உன்னில்
சேர்கையில் ஒட்டிக்கொள்கின்றன
காகிதங்கள்...
உயிரூற்றிய எச்சில்
வாசங்களில் !

எத்தனையோ இடம் மாறி,
இனம் மாறி உன்னால்
இதயம் மாற்றிக்கொண்ட காதலர்கள்
மோதிக்கொண்டதில்லை....
வீதிகளில் சாதிகளால்!

திறந்திருந்தும்
இரகசியங்கள் திறவாத
அளவான குறுவாய் - உன்
அழகிய செவ்வாய்!

கவனிப்பார் யாருமற்றபோதும்
அத்தனையும் வாங்கிக்கொண்டு
அழகாய்ச்சிரிக்கும்
பொக்கைவாய்க்குழந்தை நீ !

உன்னைப்போலவே
நானும்
கடிதங்களை இழந்த காதலியாக
கவிதைகளை இழந்து நிற்கிறேன்
பூட்டிய கனவுகளுடன்......

கவிதாயினி நிலாபாரதி

செவ்வாய், 15 டிசம்பர், 2015

மடையனை கொளுத்துவோம்

என் பாட்டு எனது உரிமை என்று எகத்தாளமாய் பேசுபவனை எழுத்துக்களால் உணரவைப்போம்
பெண் உனது உரிமைஇல்லையடா பித்துமனம்கொண்டவனே என்று!

லூசு பெண்ணே லூசு  பெண்ணே என்று பாடி காசுசேர்த்த கயவனே!
தூசு என்று நீ நினைத்தபெண்மையினால் தூர்வாரப்படப்போகிறாயாடா துச்சாதனனே!
துளியும் அச்சமில்லை
துணிந்துவிட்டோம் எங்கும் நாங்கள்
முடிந்தால் நின்றுபாரடா உன்     மூச்சுக்காற்றை எங்குவிடுவதென்று
பெற்றக்கொடுமைக்காக பிறந்தகொடுமைக்காக
உன்வீட்டு பெண்மை அதே வார்த்தைகளால் அர்ச்சிக்கப்படுவது உனக்கு அருவெறுப்பாய் தோன்றவில்லையா?
நீயும் ஒரு பெண்ணோடுதான் வாழப்போகிறாய்
வாழ்த்துக்களுக்குபதிலாக  அர்ச்சனைகள் வாங்கிவிடாதே அசிங்கமான வார்த்தைகளால்!
அழிக்கவேமுடியாத கறைகள் ஆயுளுக்கும்
அவைதான் உனக்கு
ஆயுள்தண்டனையாகவும் மாறக்கூடும் !

மாதர் தம்மை இழிவு செய்யும் மடமையை கொளுத்துவோம்! 
சிறுபொறி கிளம்பியுள்ளது தீப்பற்றிஎரியட்டும்
சில்லரைமூடர்களின் சினிமாகூடம்!

ஞாயிறு, 13 டிசம்பர், 2015

ஒலிகளை கண்டு ஒளிந்துகொள்ளாதீர்

காரி உமிழ்பவர்களுக்கு
ஒரு கடிதம் !
ஒரு ஐந்து நிமிடம்
உங்கள் செவிகளை திருப்புங்கள்

அடைமழையைவிட அதிகமாக பொங்கிக்கொண்டிருக்கிறோம் இந்த இரண்டுநாட்களாக
எட்டுதிக்கும் எட்டிவிடாத ஒருபாடலுக்காய் ....

ஆபாசங்கள் நிறைந்த வார்த்தைகளை கொண்ட
பிதற்றல்கள் உண்மைதான் .
ஆனால் ....

இவ்வளவு தூரம் வருமளவுக்கு
யார் கொடுத்தது துணிச்சல்? 
அவர்களை வளர்த்தெடுத்தது இந்தசமூகமல்லவா?

குத்துப்பாடல்கள் வரும்போதெல்லாம் குடும்பமாய் உட்கார்ந்து குதூகலித்துவிட்டு இப்போது பெண்களுக்கானது  என்று வரும்போது  மட்டும் கொதிக்கிறோமே  

இதுவும் சரியா ?

எனினும் 

மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி என்பது தரையிலோடும்  தண்ணீர் தலைக்குமேலே ஓடும்வரையில்  காத்திருந்திருந்துவிட்டு கையசைத்து காப்பாற்ற கதறும் கூட்டமாய்தான் தோன்றுகிறது.

 "நாக்கமுக்க வில் ஆரம்பித்து  டாடிமம்மி வீட்டிலில்ல" பாடல்வரை
வாண்டுகள் பாடி ஆடியும் ரசித்ததை நாம் கூட இருந்து கைத்தட்டிவிட்டு கடந்துசெல்கிறோம் இதை என்னவென்று சொல்வது? 

இதுமாதிரியான எத்தனை பாடல்களை படங்களை நாம் புறந்தள்ளியிருக்கிறோம்  இதுவரை?

மதுபானகாட்சிகளில் ஆரம்பித்து
மானாட மயிலாட காட்சிகள்வரை கருத்தேதும் சொல்லாமல் மறுப்பேதுமில்லாமல் கடந்து செல்ல பழகிவிட்டோம் .

அறுபதுவயதுகாரர் இருபது வயதுகுமரியுடன் இடைபிடித்துஆடுவதையே அருவெறுப்பில்லாமல் அமர்ந்து பார்த்துவிட்டுவருமளவுக்கு அமரத்துவம் பெற்றுவிட்டதோ நம் ரசனை? 

அதைவிட கேவலமாய் வறுமையிலிருப்பவர்களாய் சிறார்களை   சித்தரிக்கும்  சினிமாக்களை எப்போதேனும் வேண்டாமென்று 

குழந்தைகள்நல அமைப்பைதவிர வேறு யாரேனும் குரல் கொடுத்திருக்கிறோமா? 

ஆண்களெல்லாம் குடித்துவிட்டு காதல் தோல்வியில் பெண்களை நடுரோட்டில் வம்பிழுத்து ஆடிப்பாடும் காட்சிகளைகண்டும் கண்டித்திருக்கிறோமா? 


எனக்கு தெரிந்தவரையில்
புதிய தலைமுறை நடிகர்கள் நகைச்சுவை நாயகர்கள் இரட்டைஅர்த்தம் பேசாத வசனங்கள் ஏதேனும் உண்டா?

வில்லனுக்கும் நாயகனுக்கும் கோபத்தை வெளிப்படுத்த இந்த பீப்ஒலியும்   இருவார்த்தைகளும் போதுமானதாகிவிடுகிறது வறண்டுவிட்ட வசனகர்த்தாக்களுக்கு? 

இன்றைக்கு உச்சமாய் மிச்சமாயும் இந்த வார்த்தைகள் இன்னும் ஒழிந்துவிடவில்லை

வலம்வந்துகொண்டேஇருக்கும் இரைச்சலை கூட இசையென்று ரசிக்க ஒருகூட்டமிருக்கும் வரை!

சூப்பர்சிங்கர் தொடங்கி அத்தனையிலும் பொருளறியாமல் பிஞ்சுகள் சிணுங்கிப்பாடி சிரித்துமகிழ்வதை சிரமேற்று ரசிக்காதவர்கள் நம்மிலுண்டா? 

காரி உமிழ்ந்தபின்னும் கழுவப்படவேண்டிய கறைகள் நம்மிலும் உள்ளது

என்ன செய்யப்போகிறோம் நாம்? 
குமுறுவதைதாண்டியும் கூடுங்கள்  திரைப்படங்களை தரைப்படங்களாக எடுப்பதை விட, தரமான படங்களாக எடுக்கும்வரை திரையுலகை புறக்கணியுங்கள் .


சோறில்லாமல் வாழவும் பழகிக்கொண்டநாம் சினிமா சீரியலில்லாமல் வாழப்பழகுவோம் பழக்குவோம்!

நல்லதிரைப்படங்களை பள்ளிகளிலும் கல்லூரிகளிலும்  ஏன் சமூகபொறுப்புணர்வு கொண்ட அலுவலகங்களிலும் கூட திரையிட்டு அலசுங்கள் அதன் சாதகப்பாதகங்களை!

நிர்பயாக்களின் நிர்வாணத்திற்கு நிவாரணம் கொடுக்கும் காலத்தில்வாழ்ந்துகொண்டிருக்கிறோம்நாம்!

இதைவிட பெரும் தண்டனை தந்துவிடமுடியும் இந்தசமூகம்? 

ஒலிக்கு ஒளிந்துகொள்ளாதீர்கள்

செருப்பால்  சொல்லால்  அடிவாங்கியும் சிரிக்கும் அதிசயப்பிறவிகள் இவர்கள்

இவர்கள் இப்படித்தான் !
எட்டி உதைத்துவிட்டு கடந்து செல்லுங்கள்

காலவெள்ளத்தில் கரைந்துபோகும் கரையான்புற்றுக்கு கன்மலையளவு கணத்தை கொடுத்துவிடவேண்டாமே! 


திங்கள், 7 டிசம்பர், 2015

மழைப்போர்

மழை!   மழை!
இந்த ஒற்றைத்துளியில்
எத்துணை   கடலின்பம்  
தழைக்கிறது! சிரிக்கிறது
உயிர்களத்தனையும்

ஒவ்வொரு துளியும்
விழுந்து விழுந்து
எழுந்தோடும் குழந்தையென
ஓடும் காட்சிதான் 
கண்களிலும் நெஞ்சிலும்
இந்த ஆண்டின் இறுதிமாதம் இரண்டாம் திகதிவரை ....

ஆனால்......

துயரம் தோய்ந்த
விடியலாய் தொடங்குமென விழிகளுக்கு தெரிந்திருக்கவில்லை  வெள்ளம் கண்ணில் வழிந்தோடுமென்று கனவிலும் நினைக்கவில்லை!

காகிதகப்பல் மிதந்துபோன நீரே சந்தோசங்களத்தனையும்
மூழ்கடித்துப்போனது
பயத்தில் ஏறிவந்த படகுப்பயணம் !

எவ்வளவு நீந்தியும் எட்டமுடியவில்லை
எங்களின் கரையை ....

கரையும்பொழுதுகளில்
உறையும் கும்மிருட்டில் தொலைந்தேபோனது
எங்கள் கனவுறக்கம்!

தனித்தனி தேசங்களாய் வாழ்ந்திருந்தோம்
தண்ணீர்தீவுகளாய் மாற்றிப்போயிருந்தது
ஆற்றின் அளவுகடந்த தாகம்

கட்டுமரங்கள் மிதக்கலாம்....           
கான்கிரீட் வீடுகளும் மிதப்பது
காலத்தின் கொடுமை!

மிகைமின்மாநில
மின்சாரத்தை அப்படியே உறிஞ்சிக்கொண்டமாநகரம் ...

ஒரு ஏரித்தண்ணீரைக்கூட
இழுக்கமுடியாமல் இற்றுபோன மிதவையென

பரிமாறியகைகளே பசிக்கு கையேந்தும் நிலை
பிச்சைபாத்திரமுமில்லை
பிள்ளைக்குபாலுமில்லை!

நிறைந்து விட்ட வெள்ளத்தில்
வழியும் கண்ணீரின் நிறம் தெரியவாய்ப்பில்லைதான்...
தூரத்திலிருந்து துளைவழி பார்ப்பவர்களுக்கு!

இன்றோடு
நின்றுவிடக்கூடும் மழை
வடிந்துவிடவும் கூடும் வெள்ளம்
உலர்ந்துவிடுமா வறுமையின் ஈரம்

சிங்காரசென்னை
சீக்காளிகிழவன்போல நிலைகுலைந்துபோனதிந்த
நகர்மயமாதலின்விபத்தா
நாகரிகத்தின்விளைவா? 

கண்ணீரை துடைத்துவிட்டு கனவுகளை கலைத்துவிட்டு
உடைமைகளென ஓசியில்கிடைத்ததை எடுத்துக்கொண்டு கதவுதிறக்கிறோம்!
வழிகிறது.....
ஆறுகளின் உதிரம் 
உருவகமில்லாத
புதுவண்ணமாய்

இதுஒன்றுபோதும் எதிர்காலம் வாழ்வா? வீழ்வா என்பதை முடிவுசெய்ய!

யாருக்குதெரியும்? 
இந்த மழைத்துவக்கம் 
மூன்றாம் உலகப்போரின் முன்னோட்டமாகவும் இருக்கலாம் 

 

புதன், 2 டிசம்பர், 2015

எல்லோருக்கும் பெய்யும் மழை


மழைநீர் உயிர் நீர் ஆம்

பொழியும் மழைநீரில் பொசுங்கத்தொடங்கியிருக்கிறது    உயிர் புதுவிதமாய்
நீராறும் நெருப்பாய் 
உணரும் தருணம்!

கொட்டும் மழை குத்தும் குளிர் 
உயிர் உறைந்துகொண்டிருக்கிறது பயமெனும் பனிக்காற்றில்!

கழிவுநீரும் கழுவும் நீராகும் அவலம்!
சாதிகளும் சகதிகளும் சம்பந்திக்களாக்கும் 
சாணக்கிய ஓட்டம் 
சட்டென்று பெய்த மழை!

தெய்வம் நின்று கொல்லுமாம் 
பெய்தும் கொல்லும்

மழைவேண்டி 
எப்போதோ மூட்டப்பட்ட யாகங்களின் வெப்பம்

இப்போதுதான் உருகவைத்திருக்கிறது 
இமயமலையின் இருப்பிடத்தை

கிளைப்பரப்பிய பிள்ளைகளையும் 
முளைவிட்ட சிசுக்களையும் களைகளென கழுத்தறுத்து 
வேரில் தீயூட்டி  வெந்நீரில் குளிர்காய்ந்தோரே

அளவுக்கு மிஞ்சினால் 
அமிர்தமும் நஞ்சாமே 
அளவென்று எதைவைத்திருக்கிறீர்கள்?

அளந்துபோடுவதைவிட்டுவிட்டு அள்ளியல்லவா போட்டீர்கள் 
என் வயிற்றில் அத்தனையும்!

ஆற்றைஅறுத்து கூறுபோட்டு கூரைப்போட்டு கூடிக்களித்தவர்களே

அடுக்குமாடிகளின் இடுக்குகளில் இருந்துகொண்டு அறம் பேசுபவர்களே 

அறுக்கப்பட்ட எனது நரம்புகளில் அல்லவா  சுகவீணை மீட்டிக்கொண்டிருக்கிறீர்கள்!

மாமழைப்போற்றுதும்
மாமழை போற்றுதும் என்பதை மறந்தவர்களை நான் மறப்பதேஇல்லை

எனதியல்பு
எல்லோருக்கும் பெய்யும் மழை என்பதே!

புதன், 25 நவம்பர், 2015

முகமூடி மனிதர்கள்

நாடகம் முடிந்த பின்னும் கூட
ஒப்பனைகலைக்காத உன் வேசம்

நம்பவேமறுக்கிறது
எத்தனைமுறை புரண்டழுதபோதும்!

தேர்ந்தெடுக்கிறாய் தேவைக்களுக்கேற்ப பொருட்களைப்போல மனிதர்களையும்

அணிந்துக்கொள்கிறாய் முகமூடிகளை
அவ்வப்போதுக்கான  நிறங்களில்

என்றாலும் ஆயுள் வரை நிலைக்கப்போவதில்லை - உன்
நிஜம் பூசாத ஒப்பனைகள்

ஒளிந்தே பழகிய உனக்கு
உண்மையாக வாழ்வது
உண்மையில் கடினம்தான்

கழற்றியெறியப்படக்கூடும் 
காலத்தின் சுழற்சியில்  நீயும்
நிறமிழந்த முகமூடிக்கூடுகளாய் !

நிலாபாரதி

மிதக்கும் வானம்

பத்து நாள்மழை தான்
பரிசல் ஓட்டும்  அளவுக்கு
தெருக்களெல்லாம் தீவுகளாகிப்போனது பெருங்கதை

கரைகடந்த புயல்
இப்போது தரைக்கடக்கவும் மறந்துபோய்

மயங்கியே கிடப்பதென்ன அடுக்குமாடி அறைகளுக்குள்  

ஒவ்வொரு புயலின் போதும்
தன்னைத்தானே புனரமைத்த பூமிக்கா சீரமைப்பென்பது சிக்கலாகிப்போனது இன்று?

முதல் உலகப்போர் துவங்கி மூன்றாம்  உலகப்போர் மூளும் வரை நீரினால் நீர்த்துப்போன கதைகள் ஏராளம்!

தானே புயலில் தப்பித்த
தளிர்கள் கூட தரைமழையில்
தப்பிக்க இயலாமல் தண்ணீரில் தரைமட்டமானதென்ன!

ஐந்துமுறை இடைவெளி ஆண்டுகளில் 
அடைமழை பெய்தபோதும்,  
அமுதமழை பொய்த்தப்போதும்
தவிக்காத மக்களா  இன்று  தவித்துப்போகிறார்கள் தண்ணீரில்?

ஆற்றங்கரையில் நாகரீகம் கற்றவர்கள் இன்று இடுப்பு வேட்டிக்காய் இன்னொருவரிடம்
இரவல் வாங்கும்நிலை!

காலிக்குடங்களுடன் கையேந்தியவர்களின் கண்களில் நிரம்பியிருக்கின்றன கண்ணீர்குடங்கள்!

இரத்தநாளங்களையும் தொப்புள்கொடிகளையும் அறுத்தவர்களை அடையாளம் காணத்தான்   விலாசம் தேடி வீட்டுக்குள் ஒளிந்துகொண்டதோ  மழை! 

கடோத்கஜ  துவம்சமாய்
துடைத்தெடுத்து ஓடிக்கொண்டிருக்கிறது கழிவு நீர் கழுவா நீர் அத்தனையிலும் மழை

ஓட்டத்தின் கால்களை முறித்தவர்களை, மறித்தவர்களைத்தான் மழையாகமாறி பறித்துக்கொண்டிருக்கிறது உயிரோடு வாழ்வதனை!

அணைகள் கட்டிக்காத்தவர்கள் என்ற பெருமையை வரலாற்றில் வைத்துக்கொண்டு
ஆற்றையும் ஏரிகளையும்

தொலைத்து விட்டு
தொடைநடுங்கி நிற்கிறோம்..

காலம்  வகுத்த வழிதெரியாமல்
மக்களோடு சேர்ந்து
மிதக்கிறது வானம் 
கண்ணீரெனும் மழைநீரில்!

விழி நீர்க்கே அணைக்கட்ட அறியாதவர் நாங்கள்
ஏரிகளில் இருந்துகொண்டு

எங்கிருந்து கட்டுவது 

வடிநீர் மழைக்கென்று அணை?

செவ்வாய், 24 நவம்பர், 2015

நீர் சூழ் உலகு

மனிதனுக்கு மறந்தும்போகும்
மரத்துப்போகும்
மழைநடத்தும் பாடங்கள்

நீச்சலடிப்பதையும்
நீர்பிடிப்பதையும் மறந்தே போனோம்
தத்தளிக்கிறோம்
தண்ணீருக்காய் தண்ணீரில்

ஆற்றில் குளித்து ஆயுள் வளர்த்தவர்கள்
ஆற்றை தூர்த்து அடுக்குமாடி நட்டவர்களாக மாறிப்போனார்கள்

ஆயிரம்முறை கூடி ஆய்வு நடத்தியவர்கள் காதுகளுக்கு ஆற்றின் காலடியோசை கேட்டதேயில்லை இதுவரை

மணல்லாரிகளில் அழுதபடி ஓடிக்கொண்டேஆறுகளின்
அலறல்களை
அரைநொடியேனும்  கேட்டதுண்டா?

அபயக்குரலின்  அழுகை மட்டும்
ஆகாயத்திற்கு  எப்படிகேட்கும்?

மிதக்கும் மனிதர்கள்
மூழ்கிப்போன கட்டிடங்கள்
நீரைகிழித்துச்செல்லும் இயந்திரபடகுகள்

கரைகளில் நின்றபடி  கரையேறவழியின்றி
கண்ணீரிலும் தவிக்கும் மக்கள்

தீயணைப்பு,    ராணுவம்,
பேரிடர் மேலாண்மை இன்னும்பிற

எப்படியோ? 
ஆட்களை மட்டுமல்ல
ஆறுகளையும் ஏரிகளையும்
எப்படியாவது காப்பாற்றிவிடுங்கள்

தொப்புள் கொடிகளை அறுத்துவிட்டு தொடர்பில்லை சொல்லாதீர்கள்

ஏனெனில்
நீர்சூழ் உலகு  மாறவும்கூடும்
போர்சூழ் உலகாகவும் !

திங்கள், 23 நவம்பர், 2015

புயலாய் கடந்த நீ

நீரும் காற்றும் 
நிரம்பிய குமிழியாய்
இரண்டற 
எனக்குள் நீ!

உடைபடுவதென்னவோ நான்தான் உன் நிறமிழக்காத நினைவுகளால்

என்றோ ஒருநாள் 
துளியென விழுந்த  நீதான் 
இன்றைய  அடைமழையென 
நனைத்துக்கொண்டிருக்கிறாய்!

வழிந்தும் வற்றிவிடாத 
மழைத்துளி நினைவுகளால் 
உலரமறுக்கிறது  
ஈரம் ஈர்த்த களிமண் இதயம்

சலனமற்று  கவனமற்று  எனைக்கடந்துப்போகிறாய் 
சுழலத்தொடங்கியது எனக்குள் 
சூறாவளியும் பெரும்புயலும்!

முத்தங்கள் நிரம்பிய கோப்பை

இராப்பகல் இணையும் இடைவெளியில்  சந்தித்தோம்
இருவரும் ஒருவெளியில்
பனிமழை பொழியும் மரக்குடைக்குள்!

உன் விரல் கோர்த்துநடக்கையில்
நம் நிழல்சேர்ந்த வெப்பத்தில்
உயிர்காற்று உருகி
வழித்தெரியாமல் வழிந்தோட காண்கிறேன்!

மயங்கிப்போன மனதை உறங்கவைக்க இன்னும் தேவைப்படுகிறது
இரு கோப்பைகளின் தேனீர்

பால்மழை பொழிகிறாய்  பார்வைகளின் பரவசத்தால்...

தேநீரை முந்திக்கொடுத்துவிட்டு  உன்  முத்தங்களை நிரப்பிக்கொள்கிறது ..


வெற்றுக்கோப்பையல்ல - இது
முத்தங்களின்
மொத்தக்கோப்பை!

கோப்பையெங்கும்                                            நிரம்பிஇருந்தது  -உன்
எச்சில்நனைத்தமுத்தங்கள்!

ஞாயிறு, 22 நவம்பர், 2015

வரமாய் நீ!

என்னில் சுழல்கிறாய்
என்னைச் சுழலவும் வைக்கிறாய்

சேய்விரலாய் தாய்க்கரமாய்
தீண்டிப்போகிறாய்
புலர்வெயில் தொடும் பனியென உருகிப்போகிறேன் - உன் பெயரிடப்படாத பேரன்பில்!

நினைவுகளை உன் விரல்களாய் பற்றிக்கொண்டு நடைபயில்கிறேன்
நீள்கிறது நெடுஞ்சாலையென
என்கனவுப்பயணம்!

தீப்பற்றி எரியாத நினைவில்
தீண்டும் நிலை தொடராத உறவில்
இறுகப்பற்றிக்கொள்கிறேன்
விலகாப்பிடியாய்!

இதுவரை நம்பவில்லை
இறைவனாய் முழுதாய்
இனியோர் வேண்டுதல்
புதிதாய் அவனிடம்

இறக்கும் நிலையினும்
உன்னை இழத்தல் என்பது
நிகழவே கூடாதென்பதே!

செவ்வாய், 17 நவம்பர், 2015

நீ சூழ் உலகு

கவிதையென்றால் கதவடைப்பவர்கள் மத்தியில் நீ ஜன்னல் திறக்கிறாய் ...
என் வானம் விரியக்காண்கிறேன் நான்!

யாருமற்ற ஓருலகில்
யாவுமாகிறாய்
நீர் சூழ்ந்த இவ்வுலகில்
நீ சூழ வாழ்கிறேன்
தீவென உன்னினைவில் மிதந்தபடி

முடங்கிப்போன என் காலத்தின் சக்கரங்களாகிறாய் ....
சுற்றுகிறேன் திக்குதிசை தெரியாமல் திளைத்த   மகிழ்ச்சியில்!

அத்தனை விண்மீண்கள் அவதரிப்பினும்
துருவ நட்சத்திரம் நீயாகிறாய் - என் ஆகாயமண்டலத்தில்!

உடலைதுறந்துவிட்டு
உயிர்மட்டும்  உன்னோடு சுற்றிவர ஆசைக்கொண்டேன்!

ஆண்டாண்டு காலங்கள்
போனால் என்ன?
அரைநூற்றாண்டு
ஆனால்  என்ன?

வரலாறுகள் எழுதாமல்கூட போகட்டும் உன்னைப்பற்றி

என்வரலாறு என்பதெல்லாம் உன்னைப்பற்றியதை பற்றியே....

அது ஒரு மழைக்காலம்

அன்றைய ஐப்பசிதிங்கள்தான் இந்தவருடமும்  

இரு பத்தாண்டு இடைவெளிகளுக்குள்தான் 

இவ்வளவு வேறுபாடு

படகென மிதக்கிறது 

பார்போற்றிய ஒரு மாநகரம்!


எட்டிஎட்டிப்பார்த்ததில்லை

ஏதேனும் பொட்டலங்கள் போடப்படுமா என்று!
அறிவிப்புகள் வருமென்று அடைக்காத்துகிடந்ததில்லை

வெள்ளிமேகங்களையும் வெளிவாங்கிய வானத்தையும்
விரும்பியதில்லை -  எம்  வெள்ளாமைபெருங்கூட்டம்!

அடைமழை என்றால்
அவ்வளவு  ஆனந்தம்
அரையாடை உழவனுக்கு!

ஒட்டுபோட்ட ஒற்றை வேட்டிதான் ஒட்டுமொத்த ஆடையென காலம் 

ஒழுகும்  குடிசைக்குள்தான் ஒன்பதுபேரின் உயிர்வாசம்!

அடைமழைக்கு இதமாக
சுடச்சுட சுக்குக்காபி
சூடான பலகாரம்
மணமணக்கும் மீன்குழம்பு
மல்லிகைபூவாய் இட்லி
வட்டில் கறிசோறு
வட்டமாய் ஒருமாநாடு!

 சொற்பத்தைக்கொண்டு சோறென்னும் சொர்க்கம்    படைக்க அவளால் மட்டுமே முடிந்தது

இடைவிடாமல் பெய்தபோதும்
இரவல் என்று கேட்டதில்லை

குடிசைகள் நனைந்தபோதும் குடைபிடிக்க முனைந்ததில்லை

எத்தனை நாள் பெய்தபோதும்
எப்போதும் புகுந்ததில்லை - எம் வீட்டுக்குள் மழை.!
அனுமதியின்றி நாங்கள் மழைக்குள் புகுந்ததைத்தவிர

  

அன்று மகிழ்ச்சியில்  தளும்பிய அதேமனம்தான் 

இருபது ஆண்டு
இடைவெளியில்
மத்தியிலிருக்கும் மாநகரில்
தளும்புகிறது தண்ணீரிலும் கண்ணீரிலும்!

குளிருக்கு உயிர்நடுங்கும்

ஒருமகனை காப்பாற்றி 

கைசேர்க்க இயலாமல்  

நீந்திக்கொண்டிருக்கிறேன் கவலையுடன் கண்ணீரில்...

குளங்களில்
மீன்பிடித்த காலம் போய் ஆள்பிடித்துகொண்டிருக்கிறோம்
ஆயுளைபிடித்துக்கொள்வதற்காக..

வெளியில்சென்று வந்து  

என்  இருப்பிடத்தை தேடுகிறேன்
வழிமறித்துச்சொல்லிவிட்டு  

வழிதேடி ஓடியது  ஆறு

"நானும்   அதைத்தான் தேடுகிறேனென்று .."
கண்ணீரை கடலளவு சொரிந்துகொண்டு!

கலங்கியநீரில் நின்று  

தெளிந்தவானத்தை பார்க்கிறேன் 

    
"அது ஒரு மழைக்காலம் "

சனி, 14 நவம்பர், 2015

மழை வாங்கிவந்தவள்

வண்ணக்குடைகொண்டு 
போகிறாள் பொம்மி
துரத்தும்  மழைமேகங்களுடன்! 

அவள்கால்களில் தன்னை   தழுவிக்கொள்ளத்தான்
தத்தித்தத்தி ஓடிவருகிறது மழைமழலை!

கப்பல்விடும் பொம்மிக்கு
 வழிந்தோடும வாய்க்கால் கூட 
கடலாகிப்போகிறது!

திசைப்பற்றிய பயமில்லை மாலுமியாகும் எண்ணமில்லை
என்றாலும் அலைகளில்லாத கடலில்விடும் காகித கப்பல்தான் அவளை மகிழ்ச்சியில் மூழ்கவைத்து
மிதந்தபடி ஆடிப்பாடி செல்கிறது!

விடுமுறைகள் தேவையில்லை
விளையாட (டி) ச்செல்வதற்கு ...

வீதியோடும் வீட்டோடும் விருந்தாளியாய் வந்துபோகும்
வான்மழைபோதுமென்கிறாள்
ஜன்னலோரம் பேசும்  சாரல்மொழிகற்றுரசிக்கிறாள்

குடையோடு கரை கடந்து
முற்றத்தில் நுழைகிறாள்
அவளை எட்டிபிடித்து
முத்தமிட்டு முழுதாய்
 முத்துக்குளித்துச்செல்கிறது மழை! 

கடவுளைக் கண்டேன்

1.அலாரமில்லாத துயிலெழுதல்

2.பரபரப்பில்லாத அடுக்களை.

3.அவசரகதியில்லா காலை உணவு

4.நெரிசலில்லா பேருந்து பயணம்

5.சேறும் சகதியுமாகாத மழைநீர்

6.ஒழுகாத ஓட்டுப்பள்ளிக்கூடம்

7. அதட்டலில்லாத ஆசிரியை

8.ஒருவேளையாவது விரும்பிய
    உணவு

9.விழிக்கும்முன்னே விடுமுறை
   அறிவிப்பு

10. மணியடித்ததும்       எட்டிபிடிக்கும்     தூரத்தில் வீடும்  வானும் ...!

இத்தனைகனவுகளை சுமந்ததாய் புத்தகமூட்டையுடன்
எனது பயணத்தை இலேசாக்குகிறது
கதவோரத்தில் நின்று கையசைத்து சிரிக்கும் குழந்தை!


வியாழன், 12 நவம்பர், 2015

என்னைக்கண்டெடுத்தவன்

என் வானத்தில் எப்போதோ   தோன்றவேண்டிய விடிவெள்ளியென நீ!
நீல (ள)கடற்கரையில் காலருகேவந்து கட்டியிழுக்கமுயற்சிக்கும் பேரலைக்கு நடுவே என்னைமுத்தமிட்டு முழங்காலிட வைத்த சிற்றலை நீ 
உன்னைப்பற்றியும்  எழுதப்போகிறேன் 
உன்னை பற்றியும் வாழப்போகிறேன்
 விரைவில் விழித்தெழத்துவங்கும் 
என் அத்தியாயங்கள் அத்தனையிலும் நீ அறிமுகமாகிறாய் புதுமுகமாய் 
 என் புதுயுகமாய்....

காத்திருங்கள் என்னைக்கண்டெடுத்த பொக்கிஷம்  அவன் என்னை பொக்கிஷமாய் மாற்றுவதைக்காண

செவ்வாய், 10 நவம்பர், 2015

தீராவலி

எப்போதுமே அழுதுகொண்டே பிறக்கிறது தீபாவளி
எந்தவருடத்திலும் கொடுத்துவிடப்போவதில்லை
என்போன்ற
ஏழைக்கான புன்னகையை!

அரையிருட்டில் அச்சுஅசலாய்
அதிரசமும் ஐநூறு நெய்முறுக்கும்
அடுக்கடுக்காய் வைக்கப்பட்ட
மத்தாப்புபெட்டிகளும் பட்டாசுகளோடு மின்னும் பட்டாடைகளும் மொத்தமாய் வாங்கிக்கட்டிக்கொள்ளத்தான் வகைவகையாய் தோன்றுதடி
ஆயிரக்கணக்கில்!

எட்டுநாளைக்குமுன்னே எண்ணியெண்ணி எடுத்துவைத்த எட்டணாகாசெல்லாம்
எடுக்கப் போய் நிற்கையிலே
எட்டாக்கனவென்று கைக்கொட்டிச்சிரிக்குதடி

அடிவயிற்றின் வலிதாளாமல்
அழுதுபுரளும்  அண்டைவீட்டு
அம்முவின் அழுகுரலில்
அதிரடித்த சத்தமெல்லாம்
சுத்தமாய் ஒடுங்கியேபோனதடி

ஆண்டாண்டு காலமாய் ஆண்டவரிடம்
கிடைக்காத விடுதலையும் கிடைத்துவிடும்
இனாம்தொகையும் இனிப்புகளும்
எப்படி ரசிக்கவும்
ருசிக்கவும் செய்யும்
தீபாவளி எனும் இந்த
தீராவலியை?
.