புதன், 6 ஜனவரி, 2016

வீணாபோன வேட்டி

  சர்வதேச வேட்டிதினமாம்
வெட்கங்கெட்டவர்கள் சொல்கிறார்கள்
கட்டிக்காப்போமென

நீங்களா?
விளம்பர இச்சைக்காய்
விவசாய விளைநிலத்தின்
வேட்டியைஉருவியவர்கள் .

கோவணமளிப்பதே கொள்கையெனகொண்டவர்கள்
பருத்தி நிலத்தை பாழாக்கி
பாசனத்தை துகிலிரித்தவர்கள்

நொய்யலாற்றின் நீரைஅறுத்து நிறம் நெய்தவர்கள்
சிற்றாறுகளின்
சிரம் கொய்தவர்கள் ...

திருப்பூரை பெருநகராக்கி தறிநெய்தவர்களை
தெருவில் விட்டவர்கள் .

வேளாண்மையின்வேரறுத்து
விசைத்தறியின் நூலறுத்தவர்கள்

"கோட்டு"களுக்குள் கோடிகளுக்காய் கைக்குலுக்குபவர்கள்
ஜீன்ஸ்களின் நோட்டுகளை இறைக்கும் பிந்சில்லரைமனிதர்கள்!

பஞ்சான நூல்களில்கூட
பறப்பது பரதேசிகள் நாங்களில்லையே
பணத்துக்காய் பல்லிளிக்கும் படச்சுருள்நாயகர்கள்தானே!

வருடத்திற்குஒருமுறை வரமளித்த தெய்வத்திற்கு திதிகொடுக்கும் திருடர்கள் நீங்கள்தானடா!

ஆலயா, ராம்ராஜ் ,எம்சிஆர்
இன்னும் எத்தனைபேர்களிலடா
எங்களுக்கு எமனாவீர்கள்?

பருத்தியை பஞ்சாக்கி,
நூலை துணியாக்கும் எங்களுக்கல்லவா
அம்மணம் என்பது அவமானம்
உங்களுக்கு அது வெறும்
அனுமானம்தான்!

கட்டிக்காப்போமெனும் பெயரில் உருவிக்கொண்டு(று) விடாதீர்கள்
ஆதி மனிதனின் ஆடையான கோவணத்தை..,

நாங்கள்
கட்டிக்காத்துக்கொள்கிறோம் எங்களின் அடையாளமான அம்மணத்தையேனும்!

மீண்டும் கூவுகிறார்கள் 

சர்வதேச வேட்டிதினமாம்!


ஆற்றின் அம்மணத்தை உடுத்தியவர்கள்
அழகாய்சொல்கிறார்கள் ...
கலைந்துபோனதை கட்டிக்காப்போமென!

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக