சனி, 2 ஜனவரி, 2016

புத்தாண்டே வருக

இரவல் வெளிச்சங்களில்
இமையத்தையும்
எதிர்படவைக்கிறாய்

இன்னும்
ஒராயிரம் வெள்ளம் வந்தாலும் நீரில்மூழ்காமல்
மதுவில் மூழ்கும் திளைக்கும்
மக்களை மகிழ்விக்க வா

அய்லான் முதல் ஐரோம்வரை அத்தனைபேரையும்
எளிதாக மறந்து கடந்துவிட செய்யும் வித்தகவிழாவே வா

இனி எங்களுக்கெல்லாம் காகிதத்தில் காசுபணம்தேவையில்லை
கட்டைவிரல் தேய்க்கும்
கார்டுகள் போதும்

நடைபயிற்சிகள் வேண்டியே
ஊர்திகளில் ஊர்வலம்போவோம்

மருத்துவமனைகளில் தெய்வங்களையும் மனிதர்களையும்
ஒருசேர காணும்  உன்னத முன்னேற்றம்

பசுமாட்டின்  மடியெல்லாம் பாக்கெட்டுகளிலும்
பேராறுகள் போத்தல்களிலும்
அடைத்துவிடும் அறிவியல் நாயகர்களை அதிகமாக்குவோம் அடுத்த ஆண்டுக்குள்

இறப்புகள் இழப்புகள் எல்லாவற்றையும் செய்தியாக நினைவுச் செப்பேடாக
சேகரித்துவைத்துக்கொள்ளவேனும் வந்துவிடு புத்தாண்டே!

இன்னும் இன்னும் மாறக்கூடும் மனிதர்கள் நரன்களாய்
நாளைய சமூகத்தில்!

காந்தியும் இயேசுவும்
புத்தனும் அல்லாவும் கூட பிறக்ககூடும்
அவ்வப்போது வந்துபோகும்
அபாய காலங்களில்

அவர்களை அடையாளம் காணவேனும்
விருந்தாளியாய் வந்துபோய்விடு
புத்தாண்டே வருக! வருக!

1 கருத்து:

  1. “காந்தியும் இயேசுவும்
    புத்தனும் அல்லாவும் கூட
    பிறக்ககூடும்
    அவ்வப்போது வந்துபோகும்
    அபாய காலங்களில்” முதலிய சிலவரிகள் ரசிக்க வைக்கின்றன. கற்பனை வளமும் சொற்புனை நலமும் நன்றாக வரும் உங்களுக்கு, வார்த்தைகளை எப்படிச் சுருக்குவது, வரிகளை எங்கே மடக்குவது என்பதும் தெரிந்தால் இன்னும் சிறக்கும். தொடர்ந்து நல்ல நல்ல கவிதைகளைப் படிக்கப் படிக்கத்தான் அந்த எழுதா இலக்கணம் இயல்பாய்ப் படியும். வாழ்த்துகள்.

    பதிலளிநீக்கு