செவ்வாய், 8 மார்ச், 2016

எரிந்து வீழ்ந்த நட்சத்திரம்

எத்தனை சத்தமாக
ஓங்கி ஒலிக்கிறது
நெரிக்கப்பட்ட
உன்குரல்வளையின்
நொறுங்கல்கள்!

மவுனமாய் பேசியிருக்கிறாய்                             மரணத்தோடும் கூட!

விளக்குகளை கொண்டாடும்
விக்கிரகங்கள் மத்தியில்
விடிவெள்ளிகளை கண்டுரசித்திருக்கிறாய்!

எரித்தபின்னும் உன்மீது தூவப்படுகிறது
சாதியத்தின் சாம்பல்!

ஆய்வுசெய்ய திறமை
இல்லையாம்  உனக்கு
ஆச்சர்யாவின் அழுகிய வாதம்!

துரோகிகள் துரோணர்களாயிருக்கும்வரை ஏகலைவன்கள் வெற்றியென்பது தூக்குக்கயிறே!

இரங்கற்பா இயற்றுவதில்
இந்தியதேசம் வல்லரசுதான்
இன்னும் சிலநூறாண்டுகளுக்கும்

போய்வா வெமுலாவே....
ஒதுக்கீடுதான் உன்உயிர்குடித்தது. உதவித்தொகையேனும் உருப்படியாய் கிடைக்கச்செய்யுமா உயிர்குடித்த உயர்கல்விநிறுவனங்கள்?

வெள்ளி, 4 மார்ச், 2016

பயணியா

புயலாகவோ காற்றாகவோ
சட்டென கடந்துவிட
உன்னால் முடிகிறது
பயணங்களை காரணம்சொல்லி...

பிழைப்பைத்தேடி
பிரயாணிக்கும் உன்
காலடிகளுக்கு கேட்குமா?
இதயத்தின் பரிதவிப்பு நொடிகள்

உன் மூச்சுக்காற்றை முழுவதுமாக தழுவி முக்தியடைய தவமாய்
என் உயிர்குழலும் உதிரக்குழாய்களும்!

கடவுளை சந்திக்க
காத்திருக்கும் பக்தனாய்
காதலை சுமந்து காத்திருக்கிறேன்
உன் பயணப்பாதைகளெங்கும்

உன் பார்வையின் எடையில்
சிலநேரம் சிறகாய்,
பலநேரம் சருகாய் 
என்நேசம்!

எனினும் உன்னைச்சுமந்து
பறக்க எத்தனிக்கிறேன்
சாத்தியமாகிறது பறத்தலென்பது
இம்முடமான பறவைக்கும்!

திங்கள், 22 பிப்ரவரி, 2016

தூண்டில்

வார்த்தைகளால் வசீகரிக்கிறாய்
வலைவீசாமல் மாட்டிக்கொள்கிறேன்
துடிப்பதற்க்காகவே  
தூண்டில் இடுகிறாய்

தறியின் கரம்பிடித்த  நூலாய்
விலக மனமின்றி
உறவாடிக்கொண்டே இருக்கிறேன்
உயிரின் ஊடாக...... 

ஏகாந்த அலைகளை
எழுப்பிக்கொண்டே போகிறாய்
இசையென எண்ணி
இரைச்சல்களையும்
ரசித்துக்கொண்டிருக்கிறது மனம்

ஊசித்துளைக்காத
உயிரையும் துளைத்து 
நீ நுழைந்தாய்
ஒரு வ(லி)ழியும்   இல்லாமல்...!!

வீட்டுக்கு வந்த
விருந்தாளியைப்  பற்றிக்கொண்டு
விடாமல் அழும் குழந்தையாய்
உனைப்பற்றி
குழறிக் குழறி கெஞ்சுதடி
குரல்வளையும்
என் உயிர்வளியும்!!

என்னை விட்டு
எப்போது நீ  போகிறாயோ
அந்நொடியில்
உன்னோடே வந்துவிட
உயிர்
பயிற்சி   எடுக்குதடி
ஒவ்வொருமுறையும்
வெளிவந்து .......

கவிதாயினி நிலாபாரதி

திங்கள், 15 பிப்ரவரி, 2016

தனக்கென முயலுநர்

ஐந்தாண்டுகளாக எங்கள் குறைகள் அரசால் தீர்க்கப்படவில்லை
ஊதியமுரண்பாடுகளை களைய வற்புறுத்தி 20அம்ச கோரிக்கைகளுடன்
அரசு ஊழியர் சங்கத்தினர் போராட்டம்!  - செய்தி!

அரசு செய்தது சரியே!

பட்டினிகிடப்பவனின் வலியை உங்களுக்கும் பசி வந்தால் தான் உணர்வீர்களெனில்
உங்களை பசியோடு வைத்திருக்கலாம் தவறில்லை
அரசு இயந்திரசக்கரங்களே!

விளைந்தநெல்லுக்கு சரியான விலையில்லை!
பிழிந்த கரும்பின் சக்கையாக தூக்கியெறியப்பட்டிருக்கும் வறுமை எனும் எறும்புகளால் அரித்துதின்னப்படும் நாங்கள்!

காடுவிற்று ,கழனி விற்று கல்விக்கு கட்டியத்தொகைக்கு வழியின்றி கந்துவட்டிக்காரனிடம் அடமானமாய் எங்கள் தன்மானம்

படித்தவர்களுக்கு வருவாய்க்கு வழியின்றி வயிற்றை நிரப்பிக்கொள்ள ஏதோ ஒரு வேலையெனும் அடிமைத்தனம்!

எல்லாவற்றுக்கும் மேலாய் எங்களுயிரை குடிக்கும் டாஸ்மாக்,  மீத்தேன்,  வயலுக்கு வலைவிரித்து கெயிலும் இப்போதைக்கு இறுதியாய்!

இவற்றுக்கெல்லாம் வலிக்காத உறைக்காத உங்கள் சதையா ஊதியத்தின் உயர்வுக்காய் மட்டும் உரத்தசத்தமாய் அழுகிறது!

நான் பட்டினியில் அழுது சாகிறோம்
நீங்கள் உங்கள் பரம்பரைக்கு போதவில்லை என்று போராடுகிறீர்கள்

வயிறும் வயலும் உயிருக்கும் மிஞ்சியதாய் இந்த பூமியில்           ஒரு மயிரளவு கூட எஞ்சியது எதுவுமில்லை

உணருங்கள்  எம் கேளிரே!