புதன், 3 பிப்ரவரி, 2016

அது ஒரு கனாக்காலம்!

அன்றொரு நாள் ஆறுவயதில் அழுகையை துவங்கியது
இனிப்பு மிட்டாய்களுடன்
எனது கல்விப்பயணம்!

உடனிருப்பாய் ஒன்றுமில்லை என்விரல்பிடித்த தந்தையின் கையைத்தவிர!
பள்ளியென்ற பயமே
பதுங்கும் குட்டிப்பூனையானேன்.
என்னையும் உடல் முழுதும் ஒளித்துக்கொண்டு விழிகளால் மலங்க மலங்க விழித்தபடி தலைமையாசிரியர் அறைக்குள் அப்பாவுடன் நுழைகிறேன் .
புன்னகை மட்டுமே  பூச்சாய் கொண்ட
வெள்ளைஉடை தேவதை என்தலைகோதுகிறாள் .
கைகளால் என்விரல்பற்றுகையில் வியர்த்து சிலிர்த்த என்னுடம்பு இளைப்பாறுகிறது சற்று!

கைப்பிடித்து காதுதொட பணிக்கிறாள் எட்டியும்
எட்டாமலும் தொட்டுவிடுகிறேன்
அவளுக்கோ...
வானம்தொட்டுவிட்ட பரவசம்!
அன்றைக்கே அதிசய        வரமளிக்கிறாள்
வகுப்பறை உனக்குத்தான் சொந்தமெனும் ஒற்றைவரம் .

கூடவே ஒளிர்கிறது
என் அப்பாவின் கண்களிலும் ஒளிமிக்க எதிர்காலம் .

சில்வர் தட்டுகளில் ஒத்தகாசு மிட்டாய்களும் இதயவடிவ இனிப்பு மிட்டாய்களும் மட்டுமே தட்சணையாக கொடுக்கிறேன் தலைமையாசிரியை எனும் தேவதைக்கு .
ஒன்றிரண்டை எடுத்துக்கொண்டு என்னை அனுப்பிவைக்கிறாள் இன்னொருகூடத்திற்கு
நான் அப்போதுதான் உணர்கிறேன் தெய்வம் பள்ளிக்கூடங்களிலும் பவனிவருமென ..
ஆம் என் முதல் வகுப்பு ஆசிரியை பேர் அறியாமல் குண்டு டீச்சர் என்றேதான் அறியப்பட்டார்
அப்போது சாக்லேட் என்பதோ சாதி  என்பதோ நாங்கள் யாரும் அறியவில்லை .
என்வகுப்பில் இருந்த அத்தனை பேருக்கும்  மிட்டாய்களை பகிர்ந்தளிக்கிறேன்..
பதிலாக அவர்கள் புன்னகையினை பரிசளிக்கிறார்கள். மிட்டாய் தீர்ந்தபின்னும் ஏனோ தீராமல் கரையாமல் அப்படியே இனித்தபடி இன்னுமிருக்கிறது புன்னகைகள்!
அன்று மதியம் வரை அப்பா என்னோடு...
பிறகு கையசைத்துகிளம்புகிறார் அவர் மனமசைந்து  மெல்லவந்து     என் அருகில் அமர்ந்துகொள்கிறது 

அப்படியே கரும்பலகையில் "அ" எனும்  அழகிய கடவுள் வரைகிறார் என்பெயரறியா தேவதை
ஒவ்வொரு எழுத்தாய் எழுந்துவந்து  மின்மினியாய் மனதிலும் வந்து ஒட்டிக்கொள்கிறது .

பட்டாம்பூச்சிகளின் முதுகில் புத்தகக்கூடுகள் சுமக்கவில்லை
மஞ்சள்பைதான் எங்கள் இறக்கைகளாய் அங்குமிங்கும் அசைந்தாடிபடியே
தாளமிட தட்டுகளும் !

அன்றிலிருந்து  பதிமூன்று ஆண்டுகளாய் கல்வி எப்போதும் கசந்ததில்லை கணக்கு பாடம் ஒன்றைத்தவிர!

கட்டணம் கட்ட கங்கணம் கட்டியதில்லை
தண்டம் என்பது வகுப்பறையில் மட்டுமில்லை
வார்த்தைகளில் கூட இருந்ததில்லை .

வளர்த்தெடுக்க தாய்பட்ட கடமையை விட,
வார்த்தெடுத்த கும்பிடத்தகுந்த குயவர்கள் என் ஆசிரியர்களே !

படிப்பு, வாசிப்பு, சிந்தனை எல்லாம் என் ஆரம்ப, நடுநிலைப் பள்ளி  நன்றாகக்கொடுத்ததே நான் பெற்ற வரம்!

கூடவே சத்துணவுதான் எங்கள் படிப்புக்காலத்தின் மொத்த உணவு அரசுவிடுமுறைகாலத்திலும் அப்பள்ளியின் ஆயாக்களே எங்கள் மணிமேகலைகள் அண்டாக்களே எங்களின் அட்சயப்பாத்திரம்!
கீரைகளில் மசிந்து, காய்களில்  குழைந்து முட்டைகளில் உயிர்வளர்த்து ஆசிரியர்களோடு அறம் வளர்த்தவர்கள் அவர்களுமே!

இசை,  நடனம்,  நாடகம்,  விளையாட்டு அத்தனையும்  மின்மினிகளை விடிவெள்ளிகளாக்கி  விண்ணிலல்ல
மண்ணில் மக்காமல் மின்னவைத்தவர்களே
எங்கள் ஆசிரியர்கள்!

ஆனால் இன்று
அப்படியிருக்கிறதா வகுப்பறை?  ஆசிரியர்களிருக்கிறார்களா பள்ளிக்கூடங்களில்?
மணியடித்ததும் சோற்றுக்கு ஓடும் பஞ்சகால பிள்ளைகளை போலல்லவா ஓடுகிறீர்கள் பேரூந்துகளை பிடிப்பதற்கு!

உங்கள் பிள்ளைகள் எல்லாம் கான்வென்ட் பள்ளிகளின் கல்லாபெட்டிகளை நிறைப்பதற்காக எங்கள் வயிற்றிலல்லவா  வரிக்கோடிடுகிறீர்கள்?

ஒவ்வொரு ஆண்டும் ஒன்றுகூடுகிறீர்கள் ஊதியம்வேண்டுமென்று ...

வகுப்பறை கூட  வேண்டாம் விட்டுவிடுங்கள்
மரத்தடியில்கூட மாணவர்க்கு ஞானம் பிறக்கக்கூடும்.

கழிப்பறை பற்றிக்கவலைஉண்டா?
சிறுநீர் கழிக்கமுடியாமல் ஒற்றைவிரல்தூக்கி கேட்கவும் முடியாமல் ஆடையில் கறைபட்டுவிடுமென அஞ்சியபடியே வெட்கத்தில் விரும்பிய கல்வியை விட்டுவிட்டு விலகிப்போன என் தலைமுறைகளுக்கு  என்ன கொடுத்திருக்கிறீர்கள்? 
உங்கள் குரலையாவது ஒலித்திருக்கிறீர்களா? 

நீங்கள் சரியாகக்கற்பித்திருந்தால் SSA திட்டங்களுக்கு என்ன வேலையிருந்திருக்கப்போகிறது?

கருவறை தாண்டியும் வகுப்பறைகள் கல்லறைகளாக மாறுவதை, மாற்றுவதை
இனியேனும் களையெடுத்தாலென்ன?  கருவறுத்தாலென்ன?

ஆசிரியர்களே எங்களுக்கு வினாக்களுக்கு பதில்கூறுங்கள்?
இல்லையேல் வகுப்பறைக்கு வாருங்கள்..
நாங்கள் நடத்துகிறோம் வாழ்க்கைபாடம் எதுவென!

1 கருத்து:

  1. ஒன்றாம் வகுப்பில் இருந்த குண்டு டீச்சர்.... எனக்கு நாமகிரி டீச்சர்.. அத்தனை பாசம் காட்டுவார்! நினைவில் மட்டுமே அவர்.....

    பதிலளிநீக்கு