புதன், 2 டிசம்பர், 2015

எல்லோருக்கும் பெய்யும் மழை


மழைநீர் உயிர் நீர் ஆம்

பொழியும் மழைநீரில் பொசுங்கத்தொடங்கியிருக்கிறது    உயிர் புதுவிதமாய்
நீராறும் நெருப்பாய் 
உணரும் தருணம்!

கொட்டும் மழை குத்தும் குளிர் 
உயிர் உறைந்துகொண்டிருக்கிறது பயமெனும் பனிக்காற்றில்!

கழிவுநீரும் கழுவும் நீராகும் அவலம்!
சாதிகளும் சகதிகளும் சம்பந்திக்களாக்கும் 
சாணக்கிய ஓட்டம் 
சட்டென்று பெய்த மழை!

தெய்வம் நின்று கொல்லுமாம் 
பெய்தும் கொல்லும்

மழைவேண்டி 
எப்போதோ மூட்டப்பட்ட யாகங்களின் வெப்பம்

இப்போதுதான் உருகவைத்திருக்கிறது 
இமயமலையின் இருப்பிடத்தை

கிளைப்பரப்பிய பிள்ளைகளையும் 
முளைவிட்ட சிசுக்களையும் களைகளென கழுத்தறுத்து 
வேரில் தீயூட்டி  வெந்நீரில் குளிர்காய்ந்தோரே

அளவுக்கு மிஞ்சினால் 
அமிர்தமும் நஞ்சாமே 
அளவென்று எதைவைத்திருக்கிறீர்கள்?

அளந்துபோடுவதைவிட்டுவிட்டு அள்ளியல்லவா போட்டீர்கள் 
என் வயிற்றில் அத்தனையும்!

ஆற்றைஅறுத்து கூறுபோட்டு கூரைப்போட்டு கூடிக்களித்தவர்களே

அடுக்குமாடிகளின் இடுக்குகளில் இருந்துகொண்டு அறம் பேசுபவர்களே 

அறுக்கப்பட்ட எனது நரம்புகளில் அல்லவா  சுகவீணை மீட்டிக்கொண்டிருக்கிறீர்கள்!

மாமழைப்போற்றுதும்
மாமழை போற்றுதும் என்பதை மறந்தவர்களை நான் மறப்பதேஇல்லை

எனதியல்பு
எல்லோருக்கும் பெய்யும் மழை என்பதே!

2 கருத்துகள்: