ஞாயிறு, 13 டிசம்பர், 2015

ஒலிகளை கண்டு ஒளிந்துகொள்ளாதீர்

காரி உமிழ்பவர்களுக்கு
ஒரு கடிதம் !
ஒரு ஐந்து நிமிடம்
உங்கள் செவிகளை திருப்புங்கள்

அடைமழையைவிட அதிகமாக பொங்கிக்கொண்டிருக்கிறோம் இந்த இரண்டுநாட்களாக
எட்டுதிக்கும் எட்டிவிடாத ஒருபாடலுக்காய் ....

ஆபாசங்கள் நிறைந்த வார்த்தைகளை கொண்ட
பிதற்றல்கள் உண்மைதான் .
ஆனால் ....

இவ்வளவு தூரம் வருமளவுக்கு
யார் கொடுத்தது துணிச்சல்? 
அவர்களை வளர்த்தெடுத்தது இந்தசமூகமல்லவா?

குத்துப்பாடல்கள் வரும்போதெல்லாம் குடும்பமாய் உட்கார்ந்து குதூகலித்துவிட்டு இப்போது பெண்களுக்கானது  என்று வரும்போது  மட்டும் கொதிக்கிறோமே  

இதுவும் சரியா ?

எனினும் 

மன்னன் எவ்வழியோ மக்கள் அவ்வழி என்பது தரையிலோடும்  தண்ணீர் தலைக்குமேலே ஓடும்வரையில்  காத்திருந்திருந்துவிட்டு கையசைத்து காப்பாற்ற கதறும் கூட்டமாய்தான் தோன்றுகிறது.

 "நாக்கமுக்க வில் ஆரம்பித்து  டாடிமம்மி வீட்டிலில்ல" பாடல்வரை
வாண்டுகள் பாடி ஆடியும் ரசித்ததை நாம் கூட இருந்து கைத்தட்டிவிட்டு கடந்துசெல்கிறோம் இதை என்னவென்று சொல்வது? 

இதுமாதிரியான எத்தனை பாடல்களை படங்களை நாம் புறந்தள்ளியிருக்கிறோம்  இதுவரை?

மதுபானகாட்சிகளில் ஆரம்பித்து
மானாட மயிலாட காட்சிகள்வரை கருத்தேதும் சொல்லாமல் மறுப்பேதுமில்லாமல் கடந்து செல்ல பழகிவிட்டோம் .

அறுபதுவயதுகாரர் இருபது வயதுகுமரியுடன் இடைபிடித்துஆடுவதையே அருவெறுப்பில்லாமல் அமர்ந்து பார்த்துவிட்டுவருமளவுக்கு அமரத்துவம் பெற்றுவிட்டதோ நம் ரசனை? 

அதைவிட கேவலமாய் வறுமையிலிருப்பவர்களாய் சிறார்களை   சித்தரிக்கும்  சினிமாக்களை எப்போதேனும் வேண்டாமென்று 

குழந்தைகள்நல அமைப்பைதவிர வேறு யாரேனும் குரல் கொடுத்திருக்கிறோமா? 

ஆண்களெல்லாம் குடித்துவிட்டு காதல் தோல்வியில் பெண்களை நடுரோட்டில் வம்பிழுத்து ஆடிப்பாடும் காட்சிகளைகண்டும் கண்டித்திருக்கிறோமா? 


எனக்கு தெரிந்தவரையில்
புதிய தலைமுறை நடிகர்கள் நகைச்சுவை நாயகர்கள் இரட்டைஅர்த்தம் பேசாத வசனங்கள் ஏதேனும் உண்டா?

வில்லனுக்கும் நாயகனுக்கும் கோபத்தை வெளிப்படுத்த இந்த பீப்ஒலியும்   இருவார்த்தைகளும் போதுமானதாகிவிடுகிறது வறண்டுவிட்ட வசனகர்த்தாக்களுக்கு? 

இன்றைக்கு உச்சமாய் மிச்சமாயும் இந்த வார்த்தைகள் இன்னும் ஒழிந்துவிடவில்லை

வலம்வந்துகொண்டேஇருக்கும் இரைச்சலை கூட இசையென்று ரசிக்க ஒருகூட்டமிருக்கும் வரை!

சூப்பர்சிங்கர் தொடங்கி அத்தனையிலும் பொருளறியாமல் பிஞ்சுகள் சிணுங்கிப்பாடி சிரித்துமகிழ்வதை சிரமேற்று ரசிக்காதவர்கள் நம்மிலுண்டா? 

காரி உமிழ்ந்தபின்னும் கழுவப்படவேண்டிய கறைகள் நம்மிலும் உள்ளது

என்ன செய்யப்போகிறோம் நாம்? 
குமுறுவதைதாண்டியும் கூடுங்கள்  திரைப்படங்களை தரைப்படங்களாக எடுப்பதை விட, தரமான படங்களாக எடுக்கும்வரை திரையுலகை புறக்கணியுங்கள் .


சோறில்லாமல் வாழவும் பழகிக்கொண்டநாம் சினிமா சீரியலில்லாமல் வாழப்பழகுவோம் பழக்குவோம்!

நல்லதிரைப்படங்களை பள்ளிகளிலும் கல்லூரிகளிலும்  ஏன் சமூகபொறுப்புணர்வு கொண்ட அலுவலகங்களிலும் கூட திரையிட்டு அலசுங்கள் அதன் சாதகப்பாதகங்களை!

நிர்பயாக்களின் நிர்வாணத்திற்கு நிவாரணம் கொடுக்கும் காலத்தில்வாழ்ந்துகொண்டிருக்கிறோம்நாம்!

இதைவிட பெரும் தண்டனை தந்துவிடமுடியும் இந்தசமூகம்? 

ஒலிக்கு ஒளிந்துகொள்ளாதீர்கள்

செருப்பால்  சொல்லால்  அடிவாங்கியும் சிரிக்கும் அதிசயப்பிறவிகள் இவர்கள்

இவர்கள் இப்படித்தான் !
எட்டி உதைத்துவிட்டு கடந்து செல்லுங்கள்

காலவெள்ளத்தில் கரைந்துபோகும் கரையான்புற்றுக்கு கன்மலையளவு கணத்தை கொடுத்துவிடவேண்டாமே! 


2 கருத்துகள்:

  1. கனல் மழை பொழியும் கருத்துகள்.
    எழுத்துகளில் பூக்கட்டும் புரட்சி

    பதிலளிநீக்கு
  2. தெளிவை உண்டாக்கும் சிந்திக்க வேண்டிய கருத்துகள்...

    பதிலளிநீக்கு