திங்கள், 7 டிசம்பர், 2015

மழைப்போர்

மழை!   மழை!
இந்த ஒற்றைத்துளியில்
எத்துணை   கடலின்பம்  
தழைக்கிறது! சிரிக்கிறது
உயிர்களத்தனையும்

ஒவ்வொரு துளியும்
விழுந்து விழுந்து
எழுந்தோடும் குழந்தையென
ஓடும் காட்சிதான் 
கண்களிலும் நெஞ்சிலும்
இந்த ஆண்டின் இறுதிமாதம் இரண்டாம் திகதிவரை ....

ஆனால்......

துயரம் தோய்ந்த
விடியலாய் தொடங்குமென விழிகளுக்கு தெரிந்திருக்கவில்லை  வெள்ளம் கண்ணில் வழிந்தோடுமென்று கனவிலும் நினைக்கவில்லை!

காகிதகப்பல் மிதந்துபோன நீரே சந்தோசங்களத்தனையும்
மூழ்கடித்துப்போனது
பயத்தில் ஏறிவந்த படகுப்பயணம் !

எவ்வளவு நீந்தியும் எட்டமுடியவில்லை
எங்களின் கரையை ....

கரையும்பொழுதுகளில்
உறையும் கும்மிருட்டில் தொலைந்தேபோனது
எங்கள் கனவுறக்கம்!

தனித்தனி தேசங்களாய் வாழ்ந்திருந்தோம்
தண்ணீர்தீவுகளாய் மாற்றிப்போயிருந்தது
ஆற்றின் அளவுகடந்த தாகம்

கட்டுமரங்கள் மிதக்கலாம்....           
கான்கிரீட் வீடுகளும் மிதப்பது
காலத்தின் கொடுமை!

மிகைமின்மாநில
மின்சாரத்தை அப்படியே உறிஞ்சிக்கொண்டமாநகரம் ...

ஒரு ஏரித்தண்ணீரைக்கூட
இழுக்கமுடியாமல் இற்றுபோன மிதவையென

பரிமாறியகைகளே பசிக்கு கையேந்தும் நிலை
பிச்சைபாத்திரமுமில்லை
பிள்ளைக்குபாலுமில்லை!

நிறைந்து விட்ட வெள்ளத்தில்
வழியும் கண்ணீரின் நிறம் தெரியவாய்ப்பில்லைதான்...
தூரத்திலிருந்து துளைவழி பார்ப்பவர்களுக்கு!

இன்றோடு
நின்றுவிடக்கூடும் மழை
வடிந்துவிடவும் கூடும் வெள்ளம்
உலர்ந்துவிடுமா வறுமையின் ஈரம்

சிங்காரசென்னை
சீக்காளிகிழவன்போல நிலைகுலைந்துபோனதிந்த
நகர்மயமாதலின்விபத்தா
நாகரிகத்தின்விளைவா? 

கண்ணீரை துடைத்துவிட்டு கனவுகளை கலைத்துவிட்டு
உடைமைகளென ஓசியில்கிடைத்ததை எடுத்துக்கொண்டு கதவுதிறக்கிறோம்!
வழிகிறது.....
ஆறுகளின் உதிரம் 
உருவகமில்லாத
புதுவண்ணமாய்

இதுஒன்றுபோதும் எதிர்காலம் வாழ்வா? வீழ்வா என்பதை முடிவுசெய்ய!

யாருக்குதெரியும்? 
இந்த மழைத்துவக்கம் 
மூன்றாம் உலகப்போரின் முன்னோட்டமாகவும் இருக்கலாம் 

 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக