சனி, 14 நவம்பர், 2015

மழை வாங்கிவந்தவள்

வண்ணக்குடைகொண்டு 
போகிறாள் பொம்மி
துரத்தும்  மழைமேகங்களுடன்! 

அவள்கால்களில் தன்னை   தழுவிக்கொள்ளத்தான்
தத்தித்தத்தி ஓடிவருகிறது மழைமழலை!

கப்பல்விடும் பொம்மிக்கு
 வழிந்தோடும வாய்க்கால் கூட 
கடலாகிப்போகிறது!

திசைப்பற்றிய பயமில்லை மாலுமியாகும் எண்ணமில்லை
என்றாலும் அலைகளில்லாத கடலில்விடும் காகித கப்பல்தான் அவளை மகிழ்ச்சியில் மூழ்கவைத்து
மிதந்தபடி ஆடிப்பாடி செல்கிறது!

விடுமுறைகள் தேவையில்லை
விளையாட (டி) ச்செல்வதற்கு ...

வீதியோடும் வீட்டோடும் விருந்தாளியாய் வந்துபோகும்
வான்மழைபோதுமென்கிறாள்
ஜன்னலோரம் பேசும்  சாரல்மொழிகற்றுரசிக்கிறாள்

குடையோடு கரை கடந்து
முற்றத்தில் நுழைகிறாள்
அவளை எட்டிபிடித்து
முத்தமிட்டு முழுதாய்
 முத்துக்குளித்துச்செல்கிறது மழை! 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக