புதன், 25 நவம்பர், 2015

மிதக்கும் வானம்

பத்து நாள்மழை தான்
பரிசல் ஓட்டும்  அளவுக்கு
தெருக்களெல்லாம் தீவுகளாகிப்போனது பெருங்கதை

கரைகடந்த புயல்
இப்போது தரைக்கடக்கவும் மறந்துபோய்

மயங்கியே கிடப்பதென்ன அடுக்குமாடி அறைகளுக்குள்  

ஒவ்வொரு புயலின் போதும்
தன்னைத்தானே புனரமைத்த பூமிக்கா சீரமைப்பென்பது சிக்கலாகிப்போனது இன்று?

முதல் உலகப்போர் துவங்கி மூன்றாம்  உலகப்போர் மூளும் வரை நீரினால் நீர்த்துப்போன கதைகள் ஏராளம்!

தானே புயலில் தப்பித்த
தளிர்கள் கூட தரைமழையில்
தப்பிக்க இயலாமல் தண்ணீரில் தரைமட்டமானதென்ன!

ஐந்துமுறை இடைவெளி ஆண்டுகளில் 
அடைமழை பெய்தபோதும்,  
அமுதமழை பொய்த்தப்போதும்
தவிக்காத மக்களா  இன்று  தவித்துப்போகிறார்கள் தண்ணீரில்?

ஆற்றங்கரையில் நாகரீகம் கற்றவர்கள் இன்று இடுப்பு வேட்டிக்காய் இன்னொருவரிடம்
இரவல் வாங்கும்நிலை!

காலிக்குடங்களுடன் கையேந்தியவர்களின் கண்களில் நிரம்பியிருக்கின்றன கண்ணீர்குடங்கள்!

இரத்தநாளங்களையும் தொப்புள்கொடிகளையும் அறுத்தவர்களை அடையாளம் காணத்தான்   விலாசம் தேடி வீட்டுக்குள் ஒளிந்துகொண்டதோ  மழை! 

கடோத்கஜ  துவம்சமாய்
துடைத்தெடுத்து ஓடிக்கொண்டிருக்கிறது கழிவு நீர் கழுவா நீர் அத்தனையிலும் மழை

ஓட்டத்தின் கால்களை முறித்தவர்களை, மறித்தவர்களைத்தான் மழையாகமாறி பறித்துக்கொண்டிருக்கிறது உயிரோடு வாழ்வதனை!

அணைகள் கட்டிக்காத்தவர்கள் என்ற பெருமையை வரலாற்றில் வைத்துக்கொண்டு
ஆற்றையும் ஏரிகளையும்

தொலைத்து விட்டு
தொடைநடுங்கி நிற்கிறோம்..

காலம்  வகுத்த வழிதெரியாமல்
மக்களோடு சேர்ந்து
மிதக்கிறது வானம் 
கண்ணீரெனும் மழைநீரில்!

விழி நீர்க்கே அணைக்கட்ட அறியாதவர் நாங்கள்
ஏரிகளில் இருந்துகொண்டு

எங்கிருந்து கட்டுவது 

வடிநீர் மழைக்கென்று அணை?

2 கருத்துகள்:

  1. மூன்றாம் உலகப்போர் பசியால் வருமோ...?

    சரியான காலத்தில் மழை பெய்யாமல், உயிர்களின் வாழ்வைக் கெடுக்கக் கூடிய வல்லமை படைத்த மழையே... சரியாக பெய்வதன் காரணமாக உயிர்களுக்கு வாழ்வைக் கொடுத்து, காக்கும் வல்லமை படைத்ததும் நீயே...

    http://dindiguldhanabalan.blogspot.com/2015/11/Sky-Special.html

    பதிலளிநீக்கு