செவ்வாய், 17 நவம்பர், 2015

அது ஒரு மழைக்காலம்

அன்றைய ஐப்பசிதிங்கள்தான் இந்தவருடமும்  

இரு பத்தாண்டு இடைவெளிகளுக்குள்தான் 

இவ்வளவு வேறுபாடு

படகென மிதக்கிறது 

பார்போற்றிய ஒரு மாநகரம்!


எட்டிஎட்டிப்பார்த்ததில்லை

ஏதேனும் பொட்டலங்கள் போடப்படுமா என்று!
அறிவிப்புகள் வருமென்று அடைக்காத்துகிடந்ததில்லை

வெள்ளிமேகங்களையும் வெளிவாங்கிய வானத்தையும்
விரும்பியதில்லை -  எம்  வெள்ளாமைபெருங்கூட்டம்!

அடைமழை என்றால்
அவ்வளவு  ஆனந்தம்
அரையாடை உழவனுக்கு!

ஒட்டுபோட்ட ஒற்றை வேட்டிதான் ஒட்டுமொத்த ஆடையென காலம் 

ஒழுகும்  குடிசைக்குள்தான் ஒன்பதுபேரின் உயிர்வாசம்!

அடைமழைக்கு இதமாக
சுடச்சுட சுக்குக்காபி
சூடான பலகாரம்
மணமணக்கும் மீன்குழம்பு
மல்லிகைபூவாய் இட்லி
வட்டில் கறிசோறு
வட்டமாய் ஒருமாநாடு!

 சொற்பத்தைக்கொண்டு சோறென்னும் சொர்க்கம்    படைக்க அவளால் மட்டுமே முடிந்தது

இடைவிடாமல் பெய்தபோதும்
இரவல் என்று கேட்டதில்லை

குடிசைகள் நனைந்தபோதும் குடைபிடிக்க முனைந்ததில்லை

எத்தனை நாள் பெய்தபோதும்
எப்போதும் புகுந்ததில்லை - எம் வீட்டுக்குள் மழை.!
அனுமதியின்றி நாங்கள் மழைக்குள் புகுந்ததைத்தவிர

  

அன்று மகிழ்ச்சியில்  தளும்பிய அதேமனம்தான் 

இருபது ஆண்டு
இடைவெளியில்
மத்தியிலிருக்கும் மாநகரில்
தளும்புகிறது தண்ணீரிலும் கண்ணீரிலும்!

குளிருக்கு உயிர்நடுங்கும்

ஒருமகனை காப்பாற்றி 

கைசேர்க்க இயலாமல்  

நீந்திக்கொண்டிருக்கிறேன் கவலையுடன் கண்ணீரில்...

குளங்களில்
மீன்பிடித்த காலம் போய் ஆள்பிடித்துகொண்டிருக்கிறோம்
ஆயுளைபிடித்துக்கொள்வதற்காக..

வெளியில்சென்று வந்து  

என்  இருப்பிடத்தை தேடுகிறேன்
வழிமறித்துச்சொல்லிவிட்டு  

வழிதேடி ஓடியது  ஆறு

"நானும்   அதைத்தான் தேடுகிறேனென்று .."
கண்ணீரை கடலளவு சொரிந்துகொண்டு!

கலங்கியநீரில் நின்று  

தெளிந்தவானத்தை பார்க்கிறேன் 

    
"அது ஒரு மழைக்காலம் "

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக