செவ்வாய், 24 நவம்பர், 2015

நீர் சூழ் உலகு

மனிதனுக்கு மறந்தும்போகும்
மரத்துப்போகும்
மழைநடத்தும் பாடங்கள்

நீச்சலடிப்பதையும்
நீர்பிடிப்பதையும் மறந்தே போனோம்
தத்தளிக்கிறோம்
தண்ணீருக்காய் தண்ணீரில்

ஆற்றில் குளித்து ஆயுள் வளர்த்தவர்கள்
ஆற்றை தூர்த்து அடுக்குமாடி நட்டவர்களாக மாறிப்போனார்கள்

ஆயிரம்முறை கூடி ஆய்வு நடத்தியவர்கள் காதுகளுக்கு ஆற்றின் காலடியோசை கேட்டதேயில்லை இதுவரை

மணல்லாரிகளில் அழுதபடி ஓடிக்கொண்டேஆறுகளின்
அலறல்களை
அரைநொடியேனும்  கேட்டதுண்டா?

அபயக்குரலின்  அழுகை மட்டும்
ஆகாயத்திற்கு  எப்படிகேட்கும்?

மிதக்கும் மனிதர்கள்
மூழ்கிப்போன கட்டிடங்கள்
நீரைகிழித்துச்செல்லும் இயந்திரபடகுகள்

கரைகளில் நின்றபடி  கரையேறவழியின்றி
கண்ணீரிலும் தவிக்கும் மக்கள்

தீயணைப்பு,    ராணுவம்,
பேரிடர் மேலாண்மை இன்னும்பிற

எப்படியோ? 
ஆட்களை மட்டுமல்ல
ஆறுகளையும் ஏரிகளையும்
எப்படியாவது காப்பாற்றிவிடுங்கள்

தொப்புள் கொடிகளை அறுத்துவிட்டு தொடர்பில்லை சொல்லாதீர்கள்

ஏனெனில்
நீர்சூழ் உலகு  மாறவும்கூடும்
போர்சூழ் உலகாகவும் !

4 கருத்துகள்: